டாக்டர் டெம்டன் எரிக்
'லேப்ராஸ்கோபிக்' அறுவை சிகிச்சையின் இந்திய தந்தை டாக்டர் டெம்டன் எரிக் மரணம்
- அவரது மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
- மத்திய அரசு பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளன.
மும்பை :
மனிதர்களின் உள் உறுப்புகள் பாதிக்கப்படும் போது, உடலை அறுக்காமல் சிறு துளையிட்டு கணினி மூலம் திரையில் பார்த்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இது 'லேப்ராஸ்கோபிக்' அல்லது சாவி துளை அறுவை சிகிச்சை என அழைக்கப்படுகிறது.
இந்த அறுவை சிகிச்சையை இந்தியாவில் முதல் முறையாக நடத்தியவர் டாக்டர் டெம்டன் எரிக் உத்வாடியா. இதன் காரணமாக அவர், 'லேப்ராஸ்கோபிக்' அறுவை சிகிச்சையின் இந்திய தந்தை என்று அழைக்கப்படுகிறார். 88 வயதான இவர் கடந்த சில மாதங்களாக வயது முதிர்வு பிரச்சினையால் பாதிக்கப்பட்டார். மும்பையில் உள்ள பிரீச் கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.
மரணம் அடைந்த டெம்டன் எரிக் மும்பையில் பிறந்தவர். பார்சி மதத்தை சேர்ந்தவர்.
டாக்டர் டெம்டன் எரிக்கின் சிறந்த மருத்துவ சேவைக்காக அவருக்கு, மத்திய அரசு பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளன.
டாக்டர் டெம்டன் எரிக்கின் முன்னாள் மாணவரும், மும்பை ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றுபவருமான டாக்டர் தீப்ராஜ் பண்டார்கர் கூறியதாவது:-
இந்தியாவிலேயே முதல் முறையாக மும்பை ஜே.ஜே. மருத்துவமனையில் கடந்த 1990-ம் ஆண்டு மே 31-ந் தேதி லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையை டாக்டர் டெம்டன் எரிக் மேற்கொண்டார். இதுதான் ஆசியாவிலேயே முதல் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை. அவரின் புதிய முயற்சிக்கு எதிர்ப்புகள் கிளம்பின. எனினும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த அவர், நாடு முழுவதும் பயணம் செய்து மருத்துவ துறையினரை சந்தித்து லேப்ராஸ்கோபிக் சிகிச்சை முறையை பிரபலப்படுத்தினார். அதை ஒரு இயக்கமாகவே நடத்தி வெற்றி பெற்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
டாக்டர் டெம்டன் எரிக் மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்க பதிவில், ''மருத்துவ துறையில் அழிக்க முடியாத தடயத்தை டாக்டர் டெம்டன் எரிக் பதிவு செய்து சென்றிருக்கிறார். சிகிச்சை அளிக்கும் முறையில் அவரது புதுமையின் காரணமாக பரவலாக அறியப்பட்டுள்ளார். அவரது மறைவு மிகுந்த வேதனையை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், மருத்துவ துறையினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.