இந்தியா

மக்களிடையே அறிவியல் உணர்வை பரப்ப வேண்டும்- கனிமொழி

Published On 2024-01-19 07:19 GMT   |   Update On 2024-01-19 07:19 GMT
  • அறிவியலுக்கு மாற்றாக புராணங்களை முன் வைப்பதை எதிர்க்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
  • தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்திலும் கனிமொழி எம்.பி. பங்கேற்றார்.

திருவனந்தபுரம்:

திருவனந்தபுரம் அருகே உள்ள தோன்னக்கல் அறிவியல் பூங்காவில் சர்வதேச அறிவியல் திருவிழா நடைபெற்றது. இதில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கலந்து கொண்டார். கருத்தரங்கில் அவர் பேசியதாவது:-

மனிதனின் எலும்பிலும், தோலிலும் சாதி எழுதப்பட்டுள்ளதா என்று கேள்வி கேட்ட கவிஞர்கள் பண்டைய காலத்தில் நம்முடன் இருந்தனர். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கவிஞர்கள், கடவுள்களை கூட கேள்வி கேட்ட பாரம்பரியம் நமக்கு உள்ளது. ஆனால் தற்போது சாதி, மதம் போன்ற வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தங்களுக்கு பிடித்த உணவு சாப்பிடுபவர்களையும், பிடித்த உடைகள் அணிபவர்களையும் சமூகத்தை விட்டு ஒதுக்கி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பகுத்தறிவற்ற வாதங்களுக்கு பதில் அளிக்க வேண்டியது அரசியல் சாசனத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும். மக்களிடையே அறிவியல் உணர்வை பரப்ப வேண்டும் என்று நமது அரசியல் சாசனம் கூறுகிறது. ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களே அறிவியலை கட்டுக்கதையாகவும் புராணங்களை அறிவியலாகவும் திரித்து விடுகின்றனர்.

அறிவியலுக்கு மாற்றாக புராணங்களை முன் வைப்பதை எதிர்க்க அனைவரும் ஒன்றுபட வேண்டும். அறிவியல் என்பது இயற்கை நம்முடன் பேசும் மொழியாகும். அறிவியலுக்கும் அறிவியல் விழிப்புணர்வுககும் முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டிய காலகட்டம் இது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்திலும் கனிமொழி எம்.பி. பங்கேற்றார்.

Tags:    

Similar News