இந்தியா

கேரளாவில் திங்கட்கிழமை வரை கனமழை பெய்ய வாய்ப்பு

Published On 2023-07-20 05:13 GMT   |   Update On 2023-07-20 05:13 GMT
  • கேரள மாநிலத்தில் ஒரு வார இடைவெளிக்கு பிறகு நேற்று முன்தினம் முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
  • கேரள கடல் பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியபோதிலும், சில வாரங்களுக்கு முன்பு மழை பெய்ய தொடங்கியது. பல மாவட்டங்களில் கனமழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்கள் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் ஒரு வார இடைவெளிக்கு பிறகு நேற்று முன்தினம் முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. வருகிற 24-ந்தேதி வரை மாநிலத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிலும் வட மாவட்டங்களில் அதிகமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கோட்டயம், ஆலப்புழா, பத்தினம்திட்டா, கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் கேரள கடல் பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News