இந்தியா

வங்கி அதிகாரிகள் மிரட்டியதால் என்ஜினீயரிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை

Published On 2022-07-29 09:28 GMT   |   Update On 2022-07-29 09:28 GMT
  • வீரபத்திர ராவ் வீட்டிற்கு நேற்று முன்தினம் வந்த வங்கி ஊழியர்கள் அவரது மனைவி மகள்களை கடனை திருப்பி செலுத்த வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
  • வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஹர்ஷிதா வர்த்தினி நள்ளிரவு 2 மணிக்கு வீட்டு அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம், நந்தி காம அடுத்த கம்மவாரி பாளையத்தை சேர்ந்தவர் வீர பத்ரராவ். இவரது மனைவி அருணா ஸ்ரீ. தம்பதிக்கு 2 மகள்கள் இருந்தனர். இவர்களது மூத்த மகள் ஹர்ஷிதா வர்த்தினி (வயது 19). இவர் அங்குள்ள என்ஜினியரிங் கல்லூரியில் எம்.டெக் படித்து வந்தார்.

இந்த நிலையில் கொரோனா தொற்று காலத்தில் வேலை இல்லாததால் வீர பத்ர ராவ் அங்குள்ள வங்கியில் ரூ.3.50 லட்சம் கடன் வாங்கினார். வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் வங்கி ஊழியர்கள் வீட்டிற்கு வந்து மிரட்டினர். வங்கி ஊழியர்கள் மிரட்டலுக்கு பயந்த வீரபத்திர ராவ் மனைவி மற்றும் மகள்களை விட்டுவிட்டு டெல்லிக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீரபத்திர ராவ் வீட்டிற்கு வந்த வங்கி ஊழியர்கள் அவரது மனைவி மகள்களை கடனை திருப்பி செலுத்த வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஹர்ஷிதா வர்த்தினி நள்ளிரவு 2 மணிக்கு வீட்டு அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அவரது தாய் மற்றும் சகோதரி கதறி அழுதனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹர்ஷிதா வர்த்தினியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது அறையில் சோதனை செய்தபோது ஹர்ஷிதா வர்த்தினி எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், கடன் தொல்லை இருப்பதால் நாம் பிழைப்பது கடினம். மேலும் கல்லூரிக்கு கட்டணம் கட்ட கூட வசதியில்லை.

இதனால் உங்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. நான் எம்.டெக் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தற்கொலை செய்து கொண்டதாக வெளியில் உள்ளவர்களிடம் தெரிவிக்கவும். கல்லூரி ஸ்காலர்ஷிப் வர வேண்டி உள்ளது. அதனை வாங்கி தங்கையை நன்றாக கவனித்து கொள்ளவும் என உருக்கமாக எழுதி இருந்தார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கு காரணமான வங்கி ஊழியர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News