இந்தியா

'மகள் விற்பனைக்கு' என்று முகநூலில் பதிவிட்ட தந்தை: வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை

Published On 2023-09-20 14:48 IST   |   Update On 2023-09-20 14:48:00 IST
  • கேரள மாநிலத்தில் ஒருவர், முகநூலில் தனது மகள் விற்பனைக்கு என்று பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
  • கேரள மாநிலம் தொடுபுழா பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது முதல் மனைவியை பிரிந்து சென்று மற்றொரு பெண்ணை 2-வது திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

திருவனந்தபுரம்:

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை ஒவ்வொருவரும் வெவ்வேறு விதங்களில் பயன்படுத்துகின்றனர். அதிக லைக்குகளை வாங்குவதற்காக வித்தியாசமான வீடியோக்களை எடுத்து வெளியிடுவதை பலர் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

வியாபாரம் செய்து வருபவர்கள், தங்களின் தொழில் தொடர்பான விளம்பரங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்கள். தற்போதைய காலக்கட்டத்தில் மக்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவது சர்வ சாதாரணமாகிவிட்டது. இதனால் அதில் பதிவிடப்படும் தகவல்கள் மக்களை வேகமாக சென்றடைகிறது.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் ஒருவர், முகநூலில் தனது மகள் விற்பனைக்கு என்று பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் தொடுபுழா பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது முதல் மனைவியை பிரிந்து சென்று மற்றொரு பெண்ணை 2-வது திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

அந்த நபர் தனது முதல் மனைவிக்கு பிறந்த 11-வது மதிக்கத்தக்க மகளை விற்பனைக்கு இருப்பதாக முகநூலில் பதிவிட்டுள்ளார். இதனை அந்த நபருடன் தொடர்பில் இருந்த பலர் பார்த்துள்ளனர். பெற்ற மகளை விற்பனைக்கு இருக்கிறார் என்று அந்த நபர் வெளியிட்டிருந்த பதிவை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்களில் சிலர் அதுபற்றி போலீசாரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து அந்த பதிவு முகநூல் பக்கத்தில் இருந்து அகற்றப்பட்டது. முதல் மனைவியுடன் நிலவி வந்த பிரச்சனை காரணமாக மகள் விற்பனைக்கு என்று அந்த நபர் விளம்பரம் செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அந்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சைபர் கிரைம் போலீசாரின் விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட நபர் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News