இந்தியா

அரசு கல்லூரிக்குள் போராட்டம் நடத்திய மாணவ-மாணவிகளை அறைக்குள் வைத்து பூட்டிய பெண் முதல்வர் சஸ்பெண்டு

Published On 2023-02-24 07:23 GMT   |   Update On 2023-02-24 07:23 GMT
  • கல்லூரி முதல்வர் மாணவர்கள் அமர்ந்திருந்த அறையை வெளியே பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
  • முதல்வர் அறையில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த மாணவ-மாணவிகள் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் அரசு கலைக்கல்லூரி உள்ளது.

இக்கல்லூரியின் முதல்வராக ரெமா உள்ளார். இக்கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் கல்லூரி மாணவ பிரதிநிதிகள் முதல்வரை சந்தித்து பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்தனர்.

அப்போது முதல்வர் அறைக்கு சென்ற மாணவ-மாணவிகள் தங்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என கோஷமிட்டனர். மேலும் அறையில் இருந்து வெளியேற மாட்டோம் எனவும் கூறினர்.

இதனால் கல்லூரி முதல்வர் மாணவர்கள் அமர்ந்திருந்த அறையை வெளியே பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதையடுத்து முதல்வர் அறையில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த மாணவ-மாணவிகள் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

இது வைரலாகி கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகவல் கேரள உயர் கல்வித்துறை மந்திரி கவனத்திற்கும் சென்றது.

கேரள உயர் கல்வித்துறை மந்திரி பிந்து இச்சம்பவம் குறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் கல்லூரி முதல்வர் ரெமாவையும் சஸ்பெண்டு செய்து நடவடிக்கை எடுத்தார்.

இதுபற்றிய தகவலை அவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். மாணவர் போராட்டம் காரணமாக கல்லூரி முதல்வர் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News