இந்தியா

காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தயார்- சந்திரசேகரராவ் மகள் பேட்டி

Published On 2023-02-09 04:15 IST   |   Update On 2023-02-09 04:15:00 IST
  • அதானியிடம் மத்திய அரசு ஏன் விசாரணை நடத்தவில்லை.
  • தெலுங்கானா மாநிலத்தில் மட்டும்தான் அதானி குழுமத்துக்கு எந்த திட்டங்களும் கொடுக்கப்படவில்லை.

திருப்பதி:

ஐதராபாத்தில் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) தலைவரும், தெலுங்கானா முதல்-அமைச்சருமான சந்திரசேகரராவ் மகளும், எம்எல்சியுமான கவிதா நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த நாட்டில் பொது மக்களுக்காக உழைக்கும் ஒரு அரசை கொண்டுவருவதுதான் பி.ஆர்.எஸ். கட்சியின் செயல்திட்டம். நாட்டில் வளர்ச்சி ஏற்படாததற்கு பெரும்பாலான பொறுப்பு காங்கிரசையே சேரும். அதற்கு பிறகு பா.ஜ.க.வை சேரும்.

இப்போது பி.ஆர்.எஸ். ஒரு தேசிய கட்சி. இதனால் காங்கிரஸ் உட்பட எந்த கட்சியின் ஆதரவையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயார்.

அதானி விவகாரத்தில் பார்லிமென்ட் கூட்டு குழு அல்லது சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதானி குழும முறைகேடு காரணமாக மக்கள் ரூ.10 லட்சம் கோடியை இழந்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் மட்டும்தான் அதானி குழுமத்துக்கு எந்த திட்டங்களும் கொடுக்கப்படவில்லை. தேர்தல்கள் நெருங்கும் போதெல்லாம், அமலாக்க துறை, சிபிஐ,வருமான புலனாய்வுத்துறை போன்ற அமைப்புகளை பா.ஜ.க. பயன்படுத்துகிறது.

எனக்கு எதிரான மதுபான முறைகேடு வழக்கும் இதேபோன்றதுதான். நான் இந்திய பிரஜை என்ற முறையில் சிபிஐ விசாரணைக்கு நன்கு ஒத்துழைத்தேன். இதேபோல் அதானியிடம் மத்திய அரசு ஏன் விசாரணை நடத்தவில்லை. அதானி விவகாரத்தில் மத்திய அரசு மவுனமாக இருப்பது ஏன்? ஏனென்றால், மத்திய அரசுக்கு அதானி மிகவும் நெருக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News