ராகுல்காந்தி பாதயாத்திரைக்கு மத்திய அரசு திடீர் நிபந்தனை- கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க அறிவுறுத்தல்
- ராகுல்காந்தியும், பாதயாத்திரையில் அவருடன் செல்பவர்களும் கட்டாயம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
- ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் எழுதியுள்ளார்.
சீனா, ஜப்பான், தென் கொரியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது கொரோனா தொற்று திடீரென்று வேகமாக பரவி வருகிறது.
இதையடுத்து மாநிலங்களை உஷார்படுத்தி மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில், "கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். புதிதாக தோன்றுகிற கொரோனா வைரஸ் திரிபுகளை கண்டறிய வேண்டும். கொரோனா தொற்று இருப்பவர்களின் மாதிரிகளை சேகரித்து மரபணு வரிசைப்படுத்தல் சோதனைக்கு உட்படுத்துவதை முடுக்கிவிட வேண்டும்.
உலக அளவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸ் திரிபுகளை கண்காணிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு மத்திய அரசு திடீர் நிபந்தனை விதித்துள்ளது.
ராகுல்காந்தி தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த பாதயாத்திரையில் அம்மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வருகிறார்கள். இதனால் கொரோனா பரவல் அதிகரித்துவிடும் என்று கருதி மத்திய அரசு ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ராகுல்காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியி1ருப்பதாவது:-
ராகுல்காந்தியும், பாதயாத்திரையில் அவருடன் செல்பவர்களும் கட்டாயம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அனைவரும் முககவசம் அணிய வேண்டும். சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டவர்கள் மட்டுமே பாதயாத்திரையில் பங்கேற்க வேண்டும். பாதயாத்திரையில் கலந்து கொள்ளும் முன்பும், கலந்து கொண்ட பின்பும் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற முடியாவிட்டால் தேச நலனை கருத்தில் கொண்டு ராகுல்காந்தி தனது பாதயாத்திரையை ஒத்திவைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் எழுதியுள்ளார்.