இந்தியா

மதுரா கோவில் அருகே கட்டிடம் இடிந்து விழுந்து 5 பேர் பலி

Published On 2023-08-16 08:00 GMT   |   Update On 2023-08-16 09:14 GMT
  • கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாங்கே பிஹாரி கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தடைந்தனர்.
  • இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் உடனடியாக வழங்க முதல்வர் யோகி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மதுரா:

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் விருந்தாவனத்தில் பாங்கே பிஹாரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள ஸ்னே பிஹாரி ஜி கோவில் அருகில் உள்ள விருந்தாவன் கோட்வாலி பகுதி உள்ளது. இங்கு விஷ்ணு சர்மா என்பவரது பழைய வீடு உள்ளது. 2 மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தின் மேல் பகுதி மிகவும் சிதிலமடைந்திருந்தது. அங்கு சில குரங்குகள் தங்களுக்குள் சண்டையிட்டன. இதனால் அதிர்வு தாங்காமல் வீட்டின் மேல் பகுதி இடிந்து விழுந்தது.

இதில் 11 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. அப்போது கட்டிடத்தின் மற்றொரு சுவரும் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கான்பூரைச் சேர்ந்த கீதா காஷ்யப் (வயது 50), அரவிந்த் குமார் யாதவ் (35), ரஷ்மி குப்தா (52), விருந்தாவனத்தைச் சேர்ந்த அஞ்சு முர்கன் (51), தியோரி யாவைச் சேர்ந்த சந்தன் ராய் (28) ஆகிய 5 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்தனர்.

6 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கபப்ட்டனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாங்கே பிஹாரி கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தடைந்தனர். 2 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் வரிசையில் நின்றனர். அதிரிஷ்டவசமாக அப்போது விபத்து நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

5 பேர் பலியான இந்த சம்பவத்துக்கு உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத் இரங்கல் தெரிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க அவர் அறிவுறுத்தி உள்ளார். விபத்து நடந்த இடத்தில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் உடனடியாக வழங்க முதல்வர் யோகி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags:    

Similar News