இந்தியா

ஓட்டல் ஊழியர்களுக்கு ஹெல்த்கார்டு வழங்க லஞ்சம் வாங்கிய 3 அரசு டாக்டர்கள் சஸ்பெண்டு

Update: 2023-02-03 06:29 GMT
  • ஓட்டல் ஊழியர்களுக்கு டாக்டர்கள் ஹெல்த் கார்டு வழங்க லஞ்சம் வாங்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவியது.
  • பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து கேரள சுகாதாரத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த சில மாதங்களாக ஓட்டல்களில் விற்கப்படும் உணவு பொருள்கள் மீது பல்வேறு புகார்கள் வந்தன.

இதையடுத்து ஓட்டல்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஹெல்த்கார்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

அரசு டாக்டர்களிடம் இருந்து ஹெல்த் கார்டு பெற்றவர்களை மட்டுமே பணியில் அமர்த்த வேண்டும் என கேரள சுகாதாரத்துறை ஓட்டல் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டது.

அரசின் உத்தரவை தொடர்ந்து கேரளாவில் ஓட்டல்களில் பணிபுரியும் ஊழியர்கள் பலரும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று உடல்நிலையை பரிசோதித்து ஹெல்த் கார்டு பெற்று வருகிறார்கள்.

இதில் முறைகேடு நடப்பதாக சமீபத்தில் புகார்கள் வந்தது. மேலும் அரசு டாக்டர்களுக்கு லஞ்சம் கொடுத்து சிலர் ஹெல்த் கார்டு பெற்று கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஓட்டல் ஊழியர்களுக்கு டாக்டர்கள் ஹெல்த் கார்டு வழங்க லஞ்சம் வாங்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து கேரள சுகாதாரத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் 3 பேர் ஓட்டல் ஊழியர்களுக்கு ஹெல்த் கார்டு வழங்க லஞ்சம் வாங்கியது தெரியவந்தது.

இதையடுத்து லஞ்சம் வாங்கிய 3 டாக்டர்களும் உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இந்த முறைகேட்டுக்கு ஆஸ்பத்திரியில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் பொறுப்பில் இருந்த தற்காலிக ஊழியர் துணை புரிந்தது தெரியவந்தது. அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறும்போது, ஹெல்த் கார்டு வழங்குவதில் யாராவது முறைகேட்டில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News