மகாராஷ்டிராவில் பேருந்து - லாரி மோதி விபத்து: 11 பேர் உயிரிழப்பு
- விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் பேருந்து தீப்பிடித்து மேலும் உயிரிழப்பை ஏற்படுத்தியது.
- விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் இன்று அதிகாலை பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், வாகனங்கள் இரண்டும் தீப்பிடித்ததில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 32 பேர் காயமடைந்தனர்.
அவுரங்காபாத் சாலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த கோர விபத்து நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 'ஸ்லீப்பர்' பெட்டியான அந்த தனியார் பேருந்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். லாரி துலேயில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் பேருந்து தீப்பிடித்து மேலும் உயிரிழப்பை ஏற்படுத்தியது.
மேலும், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பேருந்து பயணிகள் எனவும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.