இந்தியா

கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கு: சிபிஐ விசாரிக்க தடையில்லை என உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்

Published On 2024-12-17 16:16 IST   |   Update On 2024-12-17 16:16:00 IST
  • கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என சுப்ரீம் கோர்ட் அறிவித்தது.
  • தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதுடெல்லி:

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 68 பேர் பலியானார்கள். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் என அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி நவம்பர் 20-ம் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்தும், ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் டி.குமணன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில் விஷ சாராய வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தால் அதன் விசாரணை முடிய காலதாமதம் ஆகும் என்றும், தமிழ்நாடு காவல்துறையே விசாரணையை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் மேல்முறையீட்டு மனுவில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கள்ளக்குறிச்சி வழக்கில் தமிழக காவல்துறை விசாரணையை முடித்துவிட்டது. சென்னை ஐகோர்ட் முடிவில் தலையிட விரும்பவில்லை எனக்கூறிய நீதிபதிகள், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க தடையில்லை. சி.பி.ஐ. விசாரணையை நடத்தலாம் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News