இந்தியா
null

2020 டெல்லி கலவர வழக்கு: உமர் காலித், ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமின் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Published On 2026-01-05 13:22 IST   |   Update On 2026-01-05 14:26:00 IST
  • இமாம் மற்றும் உமர் காலித்தின் ஜாமீன் மனுக்கள் 2022 முதல் நிலுவையில் உள்ளது.
  • உச்சநீதிமன்ற அமர்வு அவர்களுக்கு ஜாமீன் வழங்க பலமுறை மறுப்பு தெரிவித்தது.

2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த கலவர வழக்கில் JNU பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் உட்பட 15 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இமாம் மற்றும் உமர் காலித்தின் ஜாமின் மனுக்கள் 2022 முதல் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்ற அமர்வு அவர்களுக்கு ஜாமின் வழங்க பலமுறை மறுப்பு தெரிவித்தது.

சமீபத்தில் தனது சகோதரியின் திருமணத்திற்காக அவருக்கு 14 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. ஜாமின் காலம் முடிந்து கடந்த டிசம்பர் 29 காலித் சிறை திரும்பினார்.

இதனிடையே நியூயார்க் நகரின் புதிய மேயராகப் பதவியேற்றுள்ள ஜோஹ்ரான் மம்தானி ஏற்கனவே உமர் காலித்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். மேலும், உமர் காலித்துக்கு ஜாமின் வழங்கக் கோரியும், சர்வதேச சட்டங்களின்படி அவருக்கு நியாயமான விசாரணை நடத்த வலியுறுத்தியும் அமெரிக்காவின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியத் தூதருக்குக் கடிதம் எழுதினர். அமெரிக்க எம்.பி.க்களின் இந்தத் தலையீட்டிற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் ஜாமின் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது. அதே சமயம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குல்ஃபிஷா ஃபாத்திமா, மீரா ஹைதர், ஷிஃபா உர் ரஹ்மான், முகமது சலீம் கான் மற்றும் ஷதாப் அகமது ஆகிய 5 பேருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

Tags:    

Similar News