இந்தியா

செல்லாத மசோதாவை குடியரசுத் தலைவருக்கு எப்படி அனுப்ப முடியும்? - கவர்னருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

Published On 2025-02-10 12:16 IST   |   Update On 2025-02-10 12:16:00 IST
  • மசோதா மீது கவர்னர் எடுக்கும் முடிவு மாநில அரசுக்கு வெளிப்படையாக ஏன் தெரிவிக்கப்படவில்லை?
  • அப்படி அதிகாரம் வேந்தருக்கு உள்ளது என்றால், எதற்காக கவர்னர் அரசிடம் விளக்க வேண்டும்.

புதுடெல்லி:

தமிழக சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக கவர்னர் ஆர்.என். ரவிக்கு மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாகவும், தமிழகத்தின் 3 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் நியமன விவகாரத்தில் கவர்னர் தலையீடு அதிகரிப்பதாகவும் கூறி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்குகளைத் தொடுத்து உள்ளது.

இந்த விவகாரத்தில் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக கவர்னர் என்ற அடிப்படையில் ஒரு வழக்கையும், பல்கலைக் கழகங்களின் வேந்தர் என்ற அடிப்படையில் ஒரு வழக்கையும் தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் கடந்த 2023-ல் தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு முன்பு கடந்த வாரம் முதல் விசாரணை நடைபெற்று வருகிறது.

அதன்படி, இன்றும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. அப்போது இருதரப்பினரிடமும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதன் விவரம் வருமாறு:-

துணை வேந்தர் நியமனத்துக்கு அதிகாரம் யாருக்கு உள்ளது? என்று நீதிபதிகள் வினவ, துணைவேந்தர் நியமனம் பல்கலைக்கழக வேந்தரான கவனர்ருக்கு அதிகாரம் உள்ளது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அப்படி அதிகாரம் வேந்தருக்கு உள்ளது என்றால், எதற்காக கவர்னர் அரசிடம் விளக்க வேண்டும். யுஜிசி விதிமுறைகளை அமல்படுத்தாமல் குழு அமைத்தது தொடர்பாக கேள்வி எழுப்ப வேந்தருக்கு அதிகாரம் உள்ளதே? கவர்னர் கேள்வி எழுப்பியதில் தவறு எங்கு உள்ளது எனவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதனிடையே, மசோதா மீது கவர்னர் எடுக்கும் முடிவு மாநில அரசுக்கு வெளிப்படையாக ஏன் தெரிவிக்கப்படவில்லை? கவர்னரின் மனதில் என்ன உள்ளது என்பதை தெரிவிக்காமல் மறுஆய்வு செய்யுமாறு திருப்பி அனுப்புவது எப்படி? கவர்னர் தெரிவிக்காத நிலையில் தற்போது சட்டசபை மீண்டும் மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பி உள்ளதே? மசோதாவை சட்டமன்றம் மறுநிறைவேற்றம் செய்து அனுப்பிய போதும் கவர்னர் ஒப்புதல் தராது கிடப்பில் போட்டதை என்னவென்று கூறுவது? என்று நீதிபதிகள் சொல்ல...

மசோதாவில் சில விஷயங்கள் சரியாக இல்லாது முரண்படுகிறது என கருதியதால் தான் கவர்னர் முடிவெடுக்கவில்லை என்று கவர்னர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன்பின்னர், மறுபரிசீலனை செய்ய திருப்பி அனுப்பாது கிடப்பில் போட்டுவிட்டு பின்னர் ஜனாதிபதி முடிவுக்கு அனுப்புவது என்ன நடைமுறை? என்று நீதிபதிகள் கேட்டனர்.

Tags:    

Similar News