பாலியல் தொல்லையில் இருந்து தப்பிக்க ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த மாணவி - பகீர் வீடியோ
- அந்த ஆட்டோவில் ஓட்டுனருடன் அவரின் 3 நண்பர்களும் இருந்தனர்.
- ஆட்டோவை இருண்ட, வெறிச்சோடிய பாதையில் செலுத்தினர்.
உத்தரப் பிரதேசத்தில் பாலியல் தொல்லையில் இருந்து தப்பிக்க கல்லூரி மாணவி ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
லக்னோவில் பல்கலைக்கழகம் ஒன்றில் படிக்கும் நர்சிங் மாணவி கடந்த திங்கள்கிழமை மாலை பர்லிங்டன் பகுதியில் உள்ள தனது மாமாவின் வீட்டிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
தகவல்களின்படி, அந்தப் பெண் டெதி புலியாவை அடையும் நோக்கில் பர்லிங்டன் கிராசிங்கிலிருந்து ஒரு ஆட்டோவில் ஏறினார். அந்த ஆட்டோவில் ஓட்டுனருடன் அவரின் 3 நண்பர்களும் இருந்தனர்.
ஆட்டோ தனது சேருமிடத்திற்கு செல்லாமல் குர்சி சாலையை நோக்கி வேகமாகச் சென்றபோது அந்தப் பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அந்தப் பெண் ஓட்டுநரிடம் ஆட்டோவை நிறுத்துமாறு பலமுறை கேட்டார். ஆனால் இதன் பின் அவர்கள் பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொள்ளத் தொடங்கினர்.
மாணவி எதிர்த்து கத்தியபோது, அவரின் வாயை வலுக்கட்டாயமாக மூடி, ஆட்டோவை இருண்ட, வெறிச்சோடிய பாதையில் செலுத்தினர்.
அப்போது அந்தப் பெண் தனது உயிருக்கு பயந்து, ஓடும் வாகனத்திலிருந்து குதித்தார். இதில் அவரது தலை, கைகள் மற்றும் முழங்கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.
பெண் ஒருவர் ஆட்டோவில் இருந்து குதிப்பதைப் பார்த்த ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் காயமடைந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையில், ஆட்டோ செல்லும் வழியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, ஓட்டுநர் சத்யம் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளான அனுஜ் குப்தா என்ற ஆகாஷ், ரஞ்சித் சவுகான் மற்றும் அனில் சின்ஹா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.