எனது ரீல்ஸ்-களை பார்ப்பதை நிறுத்துங்கள்: கெஜ்ரிவாலுக்கு டெல்லி முதல்வர் அட்வைஸ்..!
- வாக்கு திருட்டு தொடர்பான காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு ரேகா குப்தா பதில் அளித்துள்ளார்.
- காங்கிரஸ் செய்தால் சரி, நாங்கள் செய்தா தவறா? எனக் கூறியதாக கெஜ்ரிவால் வீடியோ வெளியிட்டிருந்தார்.
காங்கிரசின் வாக்கு மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக, டெல்லி முதல்வர் ரேகா குப்தா பேசியதை, கெஜ்ரிவால் எடிட் செய்து வீடியோ வெளியிட்ட நிலையில் எனது ரீல்ஸ்-களை பார்ப்பதை நிறுத்துங்கள் என ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரேகா குப்தா கூறியதாவது:-
கெஜ்ர்வால் சார்-க்கு நான் சொல்ல விரும்புகிறேன், தயவு செய்து என்னுடைய வீடியோக்கள், பேட்டிகள் மற்றும் ரீல்ஸ்களை பார்ப்பதை குறைத்துக் கொள்ளவும். நான் என்ன சொல்கிறேன். என்ன சொல்லவில்லை என்று நாள் முழுவதும் என்னுடைய ரீல்ஸ்களை பார்த்து கண்டு பிடிக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
கெஜ்ரிவால் கவனம் செலுத்த விரும்பினால், பஞ்சாப் மக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அங்குள்ள மக்களை அவர் பார்க்க வில்லை.
ரேகா குப்தா பேசியதாக கெஜ்ரிவால் வெளியிட்டிருந்த வீடியோவில் "காங்கிரஸ் 70 ஆண்டுகளாக ஆட்சி செய்த காலத்தில் EVS கையாளப்பட்டது. அது பரவாயில்லை. ஆனால் இப்போது நாங்கள் கையாளும்போது அவர்கள் மோசமாக உணர்கிறார்கள்" என பதிவாகியிருந்தது. மேலும், முதலமைச்சர் என்ன சொல்கிறார்? என கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆனால் டெல்லி பாஜக ரேகா குப்தா பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் "காங்கிரஸ் 70 வருடங்களாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாண்டு வந்த வரை, அது பரவாயில்லை, ஆனால் இப்போது நாம் அதைச் செய்துவிட்டதால், அவர்கள் வருத்தப்படுகிறார்கள். அவர்கள் வெற்றி பெறும்போது, அது பொதுமக்களின் ஆணை, நாம் வெற்றி பெறும்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படுகின்றன?.
இந்த பார்முலா எங்கே எழுதப்பட்டுள்ளது? ராகுல் காந்தி இதை எங்கே படித்தார் என்று யாராவது சொல்லுங்கள். அவர் எப்போதும் பொதுமக்களை தவறாக வழி நடத்துகிறார், எப்போதும் மக்களிடம் பொய் சொல்கிறார். பொதுமக்கள் அவருக்கு பல வாய்ப்புகளை வழங்கியுள்ளனர், அவர் பல ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்துள்ளார். இன்று அவர் மிகவும் கீழ்த்தரமாக இதுபோன்ற விஷயங்களைச் சொல்லும் அளவுக்குக் தரம் தாழ்ந்துவிட்டார்" என ரேகா குப்தா குறிப்பிட்டுள்ளார்.