பாகிஸ்தானுக்கு உளவு: 11 லட்சம் Followers கொண்ட யூடியூபர் கைது.. ஜோதி மல்ஹோத்ராவுடன் தொடர்பு
- ஜோதி மல்ஹோத்ராவுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.
- டெல்லியில் நடந்த பாகிஸ்தான் தேசிய தின நிகழ்வில் ஜஸ்பீர் சிங் கலந்து கொண்டார்.
பாகிஸ்தானுக்கு ரகசியங்களை கசியவிட்டது தொடர்பாக மேலும் ஒரு யூடியூபர் கைதாகி உள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ரூப்நகரைச் சேர்ந்த யூடியூபர் ஜஸ்பீர் சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர். உளவு பார்த்ததாக முன்னர் கைது செய்யப்பட்ட ஜோதி மல்ஹோத்ராவுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரி எஹ்சான்-உர்-ரஹீம் என்பவருடன் அவர் தொடர்பில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் ஜஸ்பீர் சிங் கைது செய்யப்பட்டதாக பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜன்மஹால் என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் ஜஸ்பீர் சிங்கிற்கு 11 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
டெல்லியில் நடந்த பாகிஸ்தான் தேசிய தின நிகழ்வில் ஜஸ்பீர் சிங் கலந்து கொண்டார். 2020, 2021 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அவர் பல முறை பாகிஸ்தானுக்கு சென்று வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜஸ்பீர் சிங்கிடம் இருந்து மீட்கப்பட்ட மின்னணு சாதனங்களின் தடயவியல் பரிசோதனையில், பாகிஸ்தானுடனான தொடர்புகளைக் குறிக்கும் தொலைபேசி பதிவுகள் இருப்பது தெரியவந்துள்ளது.