இந்தியா

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு நாள்- சோனியா காந்தி, கார்கே மரியாதை

Published On 2024-05-27 04:19 GMT   |   Update On 2024-05-27 04:24 GMT
  • இன்று 60வது நினைவு நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை.
  • "இந்தியாவின் மாணிக்கத்திற்கு" அவரது நினைவுநாளில் எங்கள் பணிவான அஞ்சலி.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1964ம் ஆண்டு மே 27 அன்று தனது 74வது வயதில் மாரடைப்பால் காலமானார்.

இந்நிலையில், இன்று 60வது நினைவு நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிற கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, நேருவை நினைவு கூர்ந்த கார்கே, "நவீன இந்தியாவின் சிற்பி பண்டிட் ஜவஹர்லால் நேருவின் ஒப்பற்ற பங்களிப்பு இல்லாமல் இந்தியாவின் வரலாறு முழுமையடையாது. அறிவியல், பொருளாதாரம், தொழில்துறை மற்றும் பல்வேறு துறைகளில் இந்தியாவை முன்னோக்கி கொண்டு சென்றவர். ஜனநாயகத்தின் அர்ப்பணிப்புள்ள பாதுகாவலர், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் மற்றும் நமது உத்வேகத்தின் ஆதாரம்" என குறிப்பிட்டுள்ளார்.

"இந்தியாவின் மாணிக்கத்திற்கு" அவரது நினைவுநாளில் எங்கள் பணிவான அஞ்சலி.

பண்டித ஜவஹர்லால் நேரு கூறியது - "நாட்டின் பாதுகாப்பு, நாட்டின் முன்னேற்றம், நாட்டின் ஒற்றுமை நமது தேசிய கடமையாகும்.

நாம் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றலாம், வெவ்வேறு மாநிலங்களில் வாழலாம், வெவ்வேறு மொழிகளைப் பேசலாம், ஆனால் அது நமக்குள் ஒரு சுவரை உருவாக்கிவிடக் கூடாது. எல்லா மக்களும் முன்னேற்றத்திற்கான சம வாய்ப்புகளைப் பெற வேண்டும்.

நம் நாட்டில் சிலர் பெரும் பணக்காரர்களாகவும், பெரும்பாலான மக்கள் ஏழைகளாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. இன்றும் காங்கிரஸ் கட்சியும் அதே நீதியின் பாதையையே பின்பற்றுகிறது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News