சித்தராமையா Vs டி.கே. சிவக்குமார்: சித்தராமையா சொல்வது என்ன?
- சித்தராமையா முதல்வராக பதவி ஏற்று இரண்டரை ஆண்டு காலம் நிறைவடைந்துள்ளது.
- அடுத்த இரண்டரை ஆண்டுகள் டி.கே. சிவக்குமார் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பு.
கர்நாடக மாநில முதல்வராக இருக்கும் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் நவம்பர் 20-ந்தேதியுடன் முடிவடைந்துள்ளது. இதனால் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு டி.கே. சிவக்குமார் முதல்வராக பதவி ஏற்பார் என காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. டி.கே. சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் கார்கேவை ஏற்கனவே சந்தித்து பேசினர்.
இந்த நிலையில் சித்தராமையா உடன் கார்கே நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேல் சந்தித்து பேசியுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்குள் இது 2ஆவது சந்திப்பாகும். இதனால் முதலமைச்சர் பதவியில் மாற்றம் ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையே டி.கே. சிவக்குமார் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் டெல்லி சென்று முகாமிட்டுள்ளனர். நேற்று 6 எம்.எல்.ஏ.-க்கள் டெல்லி சென்றுள்ளனர். இவர்கள் மேலிட தலைவர்களை சந்தித்து டி.கே. சிவக்குமாரை முதலமைச்சராக்க வலியுறுத்துவார்கள் எனத் தெரிகிறது.
இதற்கிடையே, சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் ஆகியோர் மேலிடம் என்ன முடிவு செய்கிறதோ, அதை ஏற்போம் எனத் தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் மாற்றம் பேச்சு வலுத்துவரும் வரும் நிலையில் சித்தராமையாவிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-
நாங்கள் மேலிட முடிவுக்கு கட்டுப்படுவோம். அவர்கள் நான் தொடர்ந்து முதலமைச்சராக தொடர வேண்டும் என்றால், நான் தொடர்ந்து முதலமைச்சராக இருப்பேன். இறுதியாக எதுவாக இருந்தாலும் மேலிடம் முடிவு செய்யும். அதை நான் ஏற்றுக் கொள்வேன். டி.கே. சிவக்குமாரும் ஏற்றுக்கொள்வார்.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.
மேலும், டி.கே. சிவக்குமார் முதலமைச்சர் ஆவாரா? என்ற கேள்விக்கு "மேலிடம் முடிவு செய்யும் என்று நான் சொன்ன பிறகு, நீங்கள் மீண்டும் அதையே கேட்கிறீர்கள்" எனப் பதில் அளித்தார்.
ராகுல் காந்தி வெளிநாட்டில் இருந்து வந்த பிறகு, சித்தராமையா டெல்லி சென்று அவரை சந்திப்பார் எனத் தகவல் வெளியாகி வருகிறது.
முதலமைச்சர் மாற்றம் குறித்து மேலிடம் (உயர்மட்ட குழு) முடிவு செய்யும் என கார்கே தெரிவித்திருந்தார்.