சிவசேனா எம்.பியின் டிரைவருக்கு திடீரென ரூ.150 கோடி நிலம் பரிசளித்த ராயல் குடும்பம் - சர்ச்சை!
- மகராஷ்டிராவில் டிரைவராக பணிபுரியும் ஒருவருக்கு ஏன் பரிசுப் பத்திரம் கொடுக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்தது.
- சிவசேனா எம்.பி. மற்றும் அவரது மகன் மற்றும் டிரைவரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சலார் ஜங்க் என்ற வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். செல்வாக்கு மிகுந்த இந்த குடும்பத்தினர் கடந்த காலத்தில் ஐதராபாத் நிஜாம்களிடம் பணியாற்றியுள்ளனர்.
இந்த குடும்பத்தினருக்கு பல கோடி மதிப்பிலான நிலங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிராவை சேர்ந்த சிவசேனா எம்.பி.சந்தீபன்ராவ் பூம்ரேவிடம் டிரைவராக ஜாவேத் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு மகாராஷ்டிராவில் சுமார் ரூ.150 கோடி மதிப்புள்ள 3 ஏக்கர் நிலத்தை சலார்ஜன் குடும்பத்தினர் பரிசாக வழங்கியுள்ளனர். இதற்கான ஆவணத்தையும் டிரைவர் ஜாவேத்திடும் கொடுத்துள்ளனர்.
எம்.பி.யின் டிரைவருக்கு திடீரென செல்வாக்கு மிகுந்த குடும்பத்தினர் ரூ.150 கோடி மதிப்பிலான இடத்தை பரிசாக வழங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மகராஷ்டிராவில் டிரைவராக பணிபுரியும் ஒருவருக்கு ஏன் பரிசுப் பத்திரம் கொடுக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக அந்த மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். சிவசேனா எம்.பி. மற்றும் அவரது மகன் மற்றும் டிரைவரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாகவும், புலனாய்வாளர்கள் கேட்ட விவரங்களை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளேன் சலார் ஜங் குடும்பத்தின் சந்ததியினருடன் எனக்கு நல்ல உறவு உள்ளன, எனவே அவர்கள் அந்த நிலத்தை எனக்கு பரிசாக அளித்தனர்," என்று டிரைவர் கூறினார்.
ஜாவேத் எங்கள் டிரைவர் என்றாலும், அவர் செய்யும் எல்லாவற்றின் மீதும் எங்களுக்கு கட்டுப்பாடு இல்லை. எப்படியிருந்தாலும், ஹிபனாமா என்பது சொத்துக்களை பரிசாக வழங்குவதற்கான சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்று எம்.பி.யின் மகன் கூறினார்.
வக்கீல் ஒருவர் அளித்த புகாரின் பேரில் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீஸ் கமிஷனர் பிரவீன் பவார் தெரிவித்தார்.