இந்தியா

தொண்டர்களை சமாதானப்படுத்திய சரத்பவாரை படத்தில் காணலாம்.

ஓரிரு நாட்களில் இறுதி முடிவை அறிவிப்பேன்: தொண்டர்கள் மத்தியில் சரத்பவார் பேச்சு

Published On 2023-05-05 08:23 IST   |   Update On 2023-05-05 08:23:00 IST
  • புதிய தலைவரை தேர்வு செய்ய கமிட்டி கூட்டம் இன்று நடக்கிறது.
  • சுப்ரியா சுலே தலைவர் பதவிக்கு தேர்வு ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மும்பை :

82 வயதான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடந்த செவ்வாய்க்கிழமை மும்பை ஒய்.பி. சவான் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டு பேசுகையில், தான் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தடாலடி அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அங்கு கூடியிருந்த கட்சி தலைவர்கள், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். முடிவை திரும்ப பெற வேண்டும் என்று கோஷமிட்டு வலியுறுத்தினர்.

கட்சி தொண்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்றும் ஒய்.பி. சவான் அரங்கு முன் திரண்டு தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.

அப்போது, சரத்பவார் கட்சி தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும், தேவைப்பட்டால் செயல் தலைவரை நியமிக்க வேண்டும் என்று தொண்டர்கள் வலியுறுத்தினர். அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற மற்றும் மராட்டிய சட்டமன்ற தேர்தல் வரையாவது சரத்பவார் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று மேலும் பல தொண்டர்கள் வலியுறுத்தி கோஷம் போட்டனர்.

அப்போது அங்கு வந்த சரத்பவார் தொண்டர்களை சமரசப்படுத்தும் விதமாக அவர்கள் மத்தியில் பேசியதாவது:-

உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். எனது முடிவை எடுக்கும் முன் நான் உங்களின் நம்பிக்கையை பெற்று இருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்திருந்தால், எனது முடிவை நீங்கள் அனுமதித்து இருக்க மாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும்.

கட்சியின் எதிர்காலத்திற்காகவும், புதிய தலைமையை உருவாக்குவதற்காகவும் நான் ராஜினாமா முடிவை எடுத்தேன். இன்னும் ஓரிரு நாட்களில் எனது இறுதி முடிவை அறிவிப்பேன். நீங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தேசியவாத காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய சரத்பவாரால் நியமிக்கப்பட்ட கமிட்டி கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் சரத்பவார் பதவி நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என கட்சியின் செய்தி தொடர்பாளர் மகேஷ் தபசே கூறினார்.

சரத்பவார் பதவி விலகல் முடிவை திரும்ப பெற சம்மதிக்காவிட்டால், புதிய தலைவர் தேர்வு பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே எம்.பி. அந்த பதவிக்கு தேர்வு ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சரத்பவாரின் அண்ணன் மகனும், மராட்டிய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் மற்றும் சரத்பவாரின் குடும்பம் சாராத சிலரும் கட்சி தலைவர் போட்டியில் உள்ளனர்.

Tags:    

Similar News