இமாச்சலப் பிரதேசத்தில் தொடர் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு - மக்கள் அவதி
- வெள்ளத்தில் சிக்கிய சுமார் 41 பேரை துணைப் பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டனர்.
- மாநிலம் முழுவதும் 259 இணைப்புச் சாலைகள் மூடப்பட்டுள்ளன
இமாலச்சல பிரதேசத்தில் தொடர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக சிம்லா-சன்னி-கர்சோக் நெடுஞ்சாலை ஆறு போல் மாறியுள்ளது. பலத்த மழையின் விளைவாக, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. டஜன் கணக்கான வாகனங்கள் தண்ணீரில் சிக்கியதால் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இதற்கிடையில், பல பகுதிகளில் சாலைகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் வாகனப் போக்குவரத்திற்கு கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றன.
மண்டி மாவட்டத்தின் கர்சோக் பிரிவில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் பலர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். பல வீடுகள் திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
வெள்ளத்தில் சிக்கிய சுமார் 41 பேரை மாவட்ட நிர்வாகம் மற்றும் துணைப் பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டனர்.
குக்லாவில், 10 வீடுகள் மற்றும் ஒரு பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மண்டி மாவட்டத்தில் உள்ள 16 மெகாவாட் திறன் கொண்ட பதிகாரி நீர்மின் திட்டமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
அதிக நீர் ஓட்டம் காரணமாக, பாண்டு அணையிலிருந்து 1,50,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆற்றங்கரைகளுக்கு வர வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், குல்லுவில் உள்ள 126 மெகாவாட் லார்ஜி நீர்மின் திட்ட பகுதியிலும் நீர் ஓட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. திங்கட்கிழமை சிம்லாவின் புறநகர்ப் பகுதியில் ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது . இருப்பினும், கட்டிடத்தில் இருந்த அனைவரும் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
கடந்த 10 நாட்களாக மாநிலம் முழுவதும் பெய்து வரும் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் பலர் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், மாநிலம் முழுவதும் 259 இணைப்புச் சாலைகள் மூடப்பட்டுள்ளன. மறுபுறம், மாநிலம் முழுவதும் 614 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன, மேலும் 144 இடங்களில் நீர் விநியோகம் தடைபட்டுள்ளது.