இந்தியா

11 பேர் விடுதலையை எதிர்த்த வழக்கில் பில்கிஸ் பானுவுக்கு பின்னடைவு

Published On 2022-12-17 08:01 GMT   |   Update On 2022-12-17 08:01 GMT
  • கலவரத்தின்போது பில்கிஸ் பானுவை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததுடன் அவரது குடும்பத்தினரை கொலை செய்தது
  • உத்தரவை மறு ஆய்வு செய்யும்படி பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனு கடந்த 13ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

புதுடெல்லி:

குஜராத் கலவரத்தின்போது நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரும், தண்டனைக் காலம் முடியும் முன்பே நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்த குஜராத் அரசின் முடிவை எதிர்த்து, பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், பில்கிஸ் பானு தாக்கல் செய்திருந்த இரண்டு மனுக்களில் ஒரு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான மனுவை பரிசீலனை செய்யும்படி குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் 13ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும்படி பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனு கடந்த 13ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான தகவலை பில்கிஸ் பானுவின் வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்ற உதவி பதிவாளர் அனுப்பியிருக்கிறார். இது பில்கிஸ் பானுவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அவரது மற்றொரு மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்தின்போது பில்கிஸ் பானுவை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை படுகொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News