இந்தியா

சிறுமி தேவிகாவை திருச்சூர் மாவட்ட கலெக்டர் கிருஷ்ண தேஜா நேரில் அழைத்து பாராட்டிய காட்சி.

கூலித்தொழிலாளி மனைவியின் மருத்துவ செலவுக்காக யூடியூப் சேனல் தொடங்கிய பள்ளி மாணவி

Published On 2023-11-14 07:08 GMT   |   Update On 2023-11-14 07:08 GMT
  • சமூக வலைதளங்களை சிலர் நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.
  • சிறுமி தேவிகா தனது பள்ளிக்கு பஸ் ஏற 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றபடி இருந்திருக்கிறார்.

திருவனந்தபுரம்:

தற்போதைய நவீன காலத்தில் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் சிறிய குழந்தைகள் கூட செல்போனை சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை காண முடிகிறது.

செல்போன் பயன்படுத்துவோர் பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருக்கின்றனர். அவ்வாறு கணக்கு வைத்திருப்பவர்கள் அதிக லைக்குகளை வாங்குவதற்காக வித்தியாசமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.

அதே சமூக வலைதளங்களை சிலர் நல்ல விஷயங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள். அதாவது மருத்துவ சிகிச்சைகளுக்கு பணம் இல்லாமல் தவிப்பவர்கள், படிக்க வசதியில்லாமல் தவிக்கும் குழந்தைகள் உள்ளிட்ட தகவல்களையும் வெளியிடுகிறார்கள்.

இதன்மூலம் கஷ்டப்படக்கூடிய நபர்கள், பணம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை பெற முடிகிறது. அதேபோன்ற ஒரு செயலில் கேரளாவை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் செயல்பட்டுள்ளார்.

புற்றுநோய் பாதித்து அவதிப்பட்டு வரும் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவரின் மருத்துவ செலவுக்கு நிதி திரட்டுவதற்காகவே அவர் யூடியூப்பில் கணக்கு தொடங்கியிருக்கிறார். அதன்மூலம் அவருக்கு கிடைத்த 3 லட்சம் ரூபாயை அந்த பெண்ணின் சிகிச்சைக்கு கொடுத்திருக்கிறார்.

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் ராஜன். பான் ஷாப் நடத்தி வருகிறார். இவரது மகள் தேவிகா. 7-ம் வகுப்பு படித்து வருகிறார். ராஜனின் சொற்ப வருமானத்திலேயே அவரது குடும்பம் இயங்கி வருகிறது. இதனால் தனது மகளுக்கு சைக்கிள் கூட வாங்க வழியில்லாமல் இருந்திருக்கிறார்.

இதன் காரணமாக சிறுமி தேவிகா தனது பள்ளிக்கு பஸ் ஏற 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றபடி இருந்திருக்கிறார். இதனால் சைக்கிள் வாங்குவது சிறுமியின் கனவாக இருந்துள்ளது. சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் பிரேமா. அவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார்.

அந்த பெண்ணின் குடும்பமும் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பம். இதனால் அந்த பெண்ணுக்கு சிகிச்சை பெறக்கூட போதிய பணம் இல்லை. இதனையறிந்த சிறுமி தேவிகா, அந்த பெண்ணுக்கு உதவுவதற்காக யூடியூப்பில் "தேவுஸ் வேர்ல்ட்" என்ற பெயரில் கணக்கை தொடங்கினார். அதில் தனது கனவு மற்றும் தனது வீட்டின் அருகே சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிக்கும் பெண் பற்றிய தகவல்களை பதிவிட்டார்.

மேலும் சிறுமி தேவிகா தனக்கு அதிர்ஷ்ட குலுக்கலில் கிடைத்த சைக்கிளை விற்று, அதில் கிடைத்த பணத்தை புற்றுநோய் பாதித்த பெண்ணின் சிகிச்சைக்கு வழங்கினார். சிறுமி தேவிகாவின் இந்த செயலை திருச்சூர் மாவட்ட கலெக்டர் கிருஷ்ண தேஜா அறிந்தார்.

அவர் சிறுமியை நேரில் வரவழைத்து பாராட்டினார். மேலும் சிறுமியின் செயல்பாடு குறித்து கலெக்டர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

அதன்பிறகே சிறுமியின் செயல் வெளியுலகுக்கு தெரியவந்தது. இதையடுத்து பலரும் சிறுமிக்கு பண உதவி செய்தனர். மேலும் பலர் சிறுமிக்கு சைக்கிளும் வாங்கிக் கொடுத்தனர். மொத்தம் சிறுமிக்கு 12 சைக்கிள்கள் கிடைத்துள்ளன. அவை அனைத்தையும் விற்றார்.

நிதியுதவி மற்றும் சைக்கிள்களை விற்று கிடைத்த பணம் என மொத்தம் ரூ.3 லட்சம் நிதியை சிறுமி திரட்டியிருக்கிறார். அவற்றை புற்றுநோயால் பாதித்து அவதிபட்ட பெண்ணுக்கு சிகிச்சைக்காக வழங்கியிருக்கிறார்.

தனது ஆசையைப்பற்றி சிந்திக்காமல், பரிசாக கிடைத்த சைக்கிள்களையும் விற்று, அதில் கிடைத்த பணத்தை புற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு வழங்கிய மாணவி தேவிகாவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Tags:    

Similar News