இந்தியா

கேரளா கோட்டயத்தில் வினோத நோய்க்கு பள்ளி மாணவி உயிரிழப்பு

Published On 2025-02-28 10:45 IST   |   Update On 2025-02-28 10:45:00 IST
  • கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவி கவுதமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
  • மாணவியின் குடும்பத்தினர் மற்றும் அவர் படிக்கும் பள்ளி மாணவர்களின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் பருவமழை காலத்தில் பல்வேறு காய்ச்சல்கள் மட்டுமின்றி அரியவகை நோய்களும் பரவுவது வாடிக்கையாக உள்ளது. இப்படியெல்லாம் நோய் இருக்கிறதா? என்ற ஆச்சரியப்படும் வகையில் பலவித தொற்று நோய்கள் பரவும் மாநிலமாக கேரளா இருக்கிறது.

இந்தநிலையில் "குய்லின் பார் சிண்ட்ரோம்" என்ற வினோத நோய்க்கு பள்ளி மாணவி ஒருவர் பலியாகி இருக்கிறார். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் மூவாட்டுப்புழா வாழக்குளம் பகுதியை சேர்ந்த அந்த மாணவியின் பெயர் கவுதமி பிரவீன்(வயது15). காஞ்சிரப்பள்ளியில் உள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவி கவுதமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கோட்டயம் மருத்துவக்கல்லுரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு அரியவகை நோயான "குய்லின் பார் சிண்ட்ரோம்" பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஒன்றரை மாதமாக வென்டி லேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது மாணவியின் குடும்பத்தினர் மற்றும் அவர் படிக்கும் பள்ளி மாணவர்களின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

"குய்லின் பார் சிண்ட்ரோம்" நோய் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தி தசை பலவீனத்தை ஏற்படுத்தும். கூச்ச உணர்வு, உடல் பலவீனம், உடலை முடக்குதல் உள்ளிட்டவைகள் இதன் அறிகுறிகளாகும்.

"குய்லின் பார் சிண்ட்ரோம்" நோய் குறித்து மருத்துவ துறையில் கூடுதல் பேராசிரியராக பணிபுரியும் பெண் டாக்டர் ஒருவர் கூறும்போது, "நீண்டகால சிகிச்சை பெறுவதன் மூலம் அந்த நோயை குணப்படுத்த முடியும். ஆனால் சிலருக்கு உயிருக்கே ஆபத்தாக முடியும். இந்த நோய் எந்த வயதினரையும் எந்த நேரத்திலும் பாதிக்கக்கூடும். ஆனால் தொற்று நோய் கிடையாது" என்றார்.

Tags:    

Similar News