இந்தியா

கழிவுநீர் அகற்றும் போது தொழிலாளி உயிரிழந்தால் ரூ.30 லட்சம் வழங்க வேண்டும்- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2023-10-20 08:51 GMT   |   Update On 2023-10-20 08:51 GMT
  • கழிவுநீரை மனிதர்களை வைத்து அகற்றும் முறையை முற்றிலும் ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • சாக்கடை இறப்புகள் தொடர்பான வழக்குகளை ஐகோர்ட்டுகள் கண்காணிப்பதில் தடை இல்லை.

புதுடெல்லி:

கழிவுநீரை மனிதர்கள் அகற்றுவது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

பொதுநல வழக்காக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடந்தது. இன்று வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் உத்தரவுகளை பிறப்பித்து தீர்ப்பு வழங்கினர்.

சாக்கடைகளில் கழிவுநீரை அகற்றும் போது தொழிலாளி உயிரிழந்தால் அவரது குடும்பங்களுக்கு குறைந்தது ரூ.30 லட்சம் நிவாரணம் மத்திய, மாநில அரசுகள் சார்பில் வழங்க வேண்டும்.

கழிவுநீர் அகற்றும் போது தொழிலாளி ஒருவர் படுகாயம் அடைந்து நிரந்தரமாக உடல் பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடாக குறைந்தது ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். தொழி லாளிக்கு மற்ற குறைபாடுகள் ஏற்பட்டால் ரூ.10 லட்சம் வரை வழங்க வேண்டும்.

இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய அரசு அமைப்புகள் ஒருங்கிணைக்க வேண்டும். கழிவுநீரை மனிதர்களை வைத்து அகற்றும் முறையை முற்றிலும் ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாக்கடை இறப்புகள் தொடர்பான வழக்குகளை ஐகோர்ட்டுகள் கண்காணிப்பதில் தடை இல்லை.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தரவுகளின்படி, கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் சாக்கடை மற்றும் செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்யும் போது 347 பேர் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News