null
பெண்ணை கர்ப்பமாக்கினால் ரூ.25 லட்சம் பரிசு: ஆன்லைன் விளம்பரத்தை நம்பி ரூ.11 லட்சம் இழந்த நபர்
- செப்டம்பர் முதல் அக்டோபர் 23-ந்தேதி வரை சுமார் 100 பண பரிவர்த்தனைகள் மூலம் ஒப்பந்ததாரரிடம் இருந்து ரூ.11 லட்சம் பெற்றுள்ளனர்.
- இதுபோன்ற ஆன்லைன் விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
புனே:
இன்றைய நவீன உலகில் இணையதளம் மூலமாக பல்வேறு நூதன முறைகளில் மோசடிகள் நடந்து வருகிறது.
லிங்கை தொட்டால் பரிசு, அரசின் உதவித்தொகை பெற்றுத் தருகிறோம் என கூறி பணம் பறிப்பது, வங்கியில் இருந்து பேசுவதாக கூறி யு.பி.ஐ. ஐ.டி. கேட்டு பணம் பறிப்பது, டிஜிட்டல் கைது என பல்வேறு வகைகளில் மோசடிகள் அரங்கேறிய வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆனாலும் ஏமாறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பெண்ணை கர்ப்பமாக்கினால் ரூ.25 லட்சம் பரிசு என்ற ஆன்லைன் விளம்பரத்தை நம்பிய ஒருவர் ரூ.11 லட்சம் இழந்த சம்பவம் மராட்டிய மாநிலம் புனேயில் நடந்துள்ளது.
புனேயை சேர்ந்த 44 வயதான ஒருவர் ஒப்பந்ததாரராக உள்ளார். இவர் ஆன்லைனில் ஒரு விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில் பேசிய ஒரு பெண், நான் தாயாவதற்கு ஒரு ஆண் தேவை. என்னை கர்ப்பமாக்கக்கூடிய ஒரு ஆணை தேடுகிறேன். என்னை கர்ப்பமாக்கினால் ரூ.25 லட்சம் பரிசு தருகிறேன். அந்த நபரின் கல்வி, சாதி, அழகு ஒரு பொருட்டல்ல என கூறி இருந்தார்.
இதைப்பார்த்த ஒப்பந்ததாரர் சம்பந்தப்பட்ட விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த நம்பரில் தொடர்பு கொண்டபோது, சில விபரங்களை கேட்டுள்ளனர். மேலும் பரிசு பெறுவதற்காக சில சரிபார்ப்பு விதிமுறைகள் உள்ளன என கூறியுள்ளனர். பின்னர் பதிவு, சரிபார்ப்பு, ஜி.எஸ்.டி. என பல காரணங்களை கூறி பல்வேறு வகைகளில் கடந்த செப்டம்பர் முதல் அக்டோபர் 23-ந்தேதி வரை சுமார் 100 பண பரிவர்த்தனைகள் மூலம் ஒப்பந்ததாரரிடம் இருந்து ரூ.11 லட்சம் பெற்றுள்ளனர்.
பின்னர் அவர் கர்ப்பமாக்கும் வேலை தொடர்பாக தனது கேள்விகளை கேட்டபோது, மறுமுனையில் பேசியவரிடம் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை. தொடர்ந்து அவர் அழைத்தபோது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அப்போதுதான் அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து அவர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணத்தை இழந்த ஒப்பந்ததாரர் அளித்த தொலைபேசி எண் மற்றும் வங்கி கணக்கு எண்களை முடக்கி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த மோசடியின் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இதுபோன்ற ஆன்லைன் விளம்பரங்களை நம்ப வேண்டாம். என்று சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.