குடியரசு தினவிழா அணிவகுப்பு- முதல்முறையாக ஆண்கள் படைப்பிரிவுக்கு தலைமை தாங்கும் பெண் போலீஸ் அதிகாரி
- குடியரசு தின விழா அணிவகுப்பில் சி.ஆர்.பி.எப். ஆண்கள் படை பங்கேற்கிறது.
- அதிகாரி சிம்ரன் பாலா, யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதி கடந்த 2023-ம் ஆண்டு இந்த பணிக்கு சேர்ந்தார்.
புதுடெல்லி:
டெல்லி கடமைப்பாதையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆயுதப்படைகளின் அணிவகுப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த அணிவகுப்பில் இந்த ஆண்டு ஒரு பெண் அதிகாரி அனைவரது கவனத்தையும் ஈர்க்கப்போகிறார். அவரது பெயர் சிம்ரன் பாலா. 26 வயதே ஆன இவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் உதவி கமாண்டன்டராக இருக்கிறார். இவர் ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேரா கிராமத்தைச் சேர்ந்தவர்.
குடியரசு தின விழா அணிவகுப்பில் சி.ஆர்.பி.எப். ஆண்கள் படை பங்கேற்கிறது. 140 வீரர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். இந்த படையின் தளபதியாக சிம்ரன் பாலா, கம்பீர நடை போட இருக்கிறார்.
முதல்முறையாக ஆண்கள் படையை தலைமை தாங்கி இவர் அழைத்துச் செல்லும் காட்சியைக் காண நாடே காத்திருக்கிறது. இது பெண்களுக்கான அங்கீகாரம் என்றும் அதிகாரிகள் பெருமைப்பட்டு உள்ளனர். அதிகாரி சிம்ரன் பாலா, யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதி கடந்த 2023-ம் ஆண்டு இந்த பணிக்கு சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.