இந்தியா

வருகிறது 'ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ்'..! ஏ.ஐ. துறையில் களமிறங்கும் முகேஷ் அம்பானி

Published On 2025-08-30 09:27 IST   |   Update On 2025-08-30 09:27:00 IST
  • ‘ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ்’ என்ற முழுக்க முழுக்க எங்களுக்கு சொந்தமான துணை நிறுவனம் உருவாக்கப்படுகிறது.
  • ஏ.ஐ.யின் அற்புதமான சக்தியை ‘புதிய காமதேனு’ என்று சொல்லலாம்.

அனைவருக்கும், அனைத்து இடங்களிலும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை அளிப்பதற்காக 'ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ்' என்ற நிறுவனம் அமைக்கப்படும் என்று முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் இ்ண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் டெல்லியில் நடந்தது.

அதில், நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பேசியதாவது:-

10 ஆண்டுகளுக்கு முன்பு, ரிலையன்சுக்கு டிஜிட்டல் சேவைகள் ஒரு புதிய வளர்ச்சி எந்திரமாக இருந்தது. தற்போது, எங்களுக்கு முன்பு உள்ள வாய்ப்பாக ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு உள்ளது.

நாட்டில் அனைவருக்கும், அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் சேவை கிடைப்பதை ஜியோ உறுதி செய்தது. அதுபோல், அனைவருக்கும், அனைத்து இடங்களிலும் ஏ.ஐ. தொழில்நுட்பம் கிடைப்பதற்காக 'ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ்' என்ற முழுக்க முழுக்க எங்களுக்கு சொந்தமான துணை நிறுவனம் உருவாக்கப்படுகிறது.

இந்தியாவில் பிரமாண்ட அளவில் ஏ.ஐ. உள்கட்டமைப்பை ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் உருவாக்கும். பசுமை ஆற்றலால் இயக்கப்படும் ஜிகாவாட் அளவிலான, ஏ.ஐ. தயார் தரவு மையங்களை அமைக்கும். ஜாம்நகரில் ஏற்கனவே இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. இந்தியாவின் வளரும் தேவைகளுக்கு ஏற்ப இந்த வசதிகள் படிப்படியாக வழங்கப்படும்.

இந்தியாவின் அடுத்த தலைமுறை ஏ.ஐ. உள்கட்டமைப்பை உருவாக்குதல், உலகளாவிய கூட்டாண்மைகளை உருவாக்குதல், இந்தியாவுக்கு ஏ.ஐ. சேவைகளை கட்டமைத்தல், ஏ.ஐ. திறனை வளர்த்தல் ஆகியவைதான் ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸின் 4 தெளிவான நோக்கங்கள்.

வாடிக்கையாளர்கள், சிறு வணிகங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நம்பகமான, பயன்படுத்துவதற்கு எளிதான ஏ.ஐ. சேவைகளை ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் வழங்கும்.

கல்வி, சுகாதாரம், வேளாண்மை போன்ற தேசிய முக்கியத்துவம்வாய்ந்த துறைகளுக்கு தீர்வுகள் அளிக்கும். ஒவ்வொரு இந்தியருக்கும் மலிவான விலையில் சேவை கிடைக்கும்.

ஏ.ஐ.யின் அற்புதமான சக்தியை 'புதிய காமதேனு' என்று சொல்லலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News