டெல்லி கார் வெடிப்பில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்த ரேகா குப்தா
- இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சாந்தினி சவுக் மெட்ரோ நிலையம் அருகே நேற்று மாலை கார் ஒன்று திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது.
இதில் அருகில் இருந்த வாகனங்களுக்கும் தீ பரவியது. இந்த சமபவத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் வரை தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து பயங்கரவாத தாக்குதலா? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.
இந்நிலையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் லோக் நாயக் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறியுள்ளார்.
பின்னர், மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் குழுவுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். முன்னதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மருத்துவமனைக்கு வந்து பார்வையிட்டுச் சென்ற நிலையில் ரேகா குப்தா வருகை தந்துள்ளார்.
இதற்கிடையே ரேகா குப்தா வெளியிட்ட இரங்கல் எக்ஸ் பதிவில், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.