இந்தியா

ஹவுதி தாக்குதல் எதிரொலி: அரபிக்கடலில் 10-க்கும் மேற்பட்ட இந்திய போர் கப்பல்கள் கண்காணிப்பு

Published On 2024-01-09 06:08 GMT   |   Update On 2024-01-09 06:08 GMT
  • செங்கடலில் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.
  • இந்தியா வரும் கப்பல்களுக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு கண்காணிப்பு அதிகரிப்பு.

இஸ்ரேலுக்குள் கடந்த அக்டோபர் 7-ந்தேதி புகுந்த ஹமாஸ் அமைப்பினர் சுமார் 1,200 பேரை படுகொலை செய்தனர். அதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசாவுக்குள் புகுந்து கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இருதரப்பிலும் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்த போரில் மேற்கத்திய நாடுகளும், இஸ்லாமிய நாடுகளும் வெவ்வேறு சார்பு நிலைகளை எடுத்துள்ளதால் போர் விரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த பின்னணியில் ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்தனர்.

கடந்த நவம்பர் 19-ந்தேதிக்கு பிறகு 20-க்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். செங்கடல் வழியாக செல்லும் சரக்குக் கப்பல்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்கத் தொடங்கி இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கிளர்ச்சியாளர்கள் செங்கடல் வழியாக செல்லும் கப்பல்கள் மீது ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தொடர்ந்து தாக்குகிறார்கள். இதுவரை 60-க்கும் மேற்பட்ட டிரோன்களை அமெரிக்க கடற்படை கப்பல்கள் வழிமறித்து அழித்துள்ளன.

கிளர்ச்சியாளர்கள் மிரட்டல் நீடிப்பதால் இந்தியாவுக்கு செங்கடல் வழியாக வரும் பெட்ரோலிய பொருட்கள் வருகையில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதனால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இந்திய கடற்படை போர் கப்பல்கள் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல், செங்கடல் பகுதிகளுக்கு அதிகமாக செல்ல தொடங்கி உள்ளன. 10 முக்கிய போர் கப்பல்கள் அந்த கடல் பகுதிகளில் ரோந்து சுற்றி வருகின்றன.

இந்த போர் கப்பல்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க இந்திய கடற்படை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கிளர்ச்சியாளர்களை ஒடுக்கி இந்திய கப்பல்கள் சிரமமின்றி வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Tags:    

Similar News