இந்தியா

கெஜ்ரிவால் கட்சியிடம் இருந்து ரூ.97 கோடியை திரும்பப்பெறுங்கள்: கவர்னர் அதிரடி உத்தரவு

Published On 2022-12-21 07:37 IST   |   Update On 2022-12-21 07:37:00 IST
  • டெல்லி அரசு ரூ.97 கோடியே 14 லட்சம் அளவுக்கு ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.
  • ரூ.54 கோடியே 87 லட்சம் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளதாக தெரிகிறது.

புதுடெல்லி :

டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. ஆனால் அங்கு அரசுக்கும், துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்த நிலையில் டெல்லி அரசு ரூ.97 கோடியே 14 லட்சம் அளவுக்கு ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. டெல்லி அரசு, மக்களின் வரிப்பணத்தில் அரசியல் விளம்பரங்களை அரசின் விளம்பரங்களாக வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக மத்திய தகவல், ஒலிபரப்புத்துறையால் உருவாக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ள விளம்பரங்களுக்கான உள்ளடக்க விதிமுறைகளை மீறி இந்த அளவுக்கு ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விளம்பரங்கள், அரசின் விளம்பரங்களாக வெளியிடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விளம்பரங்களுக்கு ரூ.42 கோடியே 26 லட்சம், டி.ஐ.பி. என்று அழைக்கப்படுகிற அரசு தகவல், விளம்பரத்துறை செலுத்தி உள்ளது. ஆனால் ரூ.54 கோடியே 87 லட்சம் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளதாக தெரிகிறது.

இந்த விளம்பரங்களுக்கான மொத்த கட்டணமான ரூ.97 கோடியே 14 லட்சத்தை ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து வசூலிக்குமாறு அரசு தலைமைச்செயலாளருக்கு டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா உத்தரவிட்டுள்ளார். இது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ், டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்கள் தேசிய கட்சியாக உருவாகி இருப்பதும், டெல்லி மாநகராட்சியை கைப்பற்றி இருப்பதும் பா.ஜ.க.வை பதைபதைப்புக்கு ஆளாக்கி உள்ளது. பா.ஜ.க.வின் வழிகாட்டுதல்படி டெல்லி துணை நிலை கவர்னர் செயல்பட்டு வருகிறார்.

அவர் விளம்பர விவகாரத்தில் பிறப்பித்துள்ள உத்தரவு, சட்டத்தின்முன் செல்லுபடியாகாது. டெல்லி துணை நிலை கவர்னருக்கு அத்தகைய அதிகாரம் கிடையாது. அவர் இப்படிப்பட்ட உத்தரவுகளை பிறப்பிக்கவும் முடியாது.

பல்வேறு பா.ஜ.க. மாநில அரசுகள் இத்தகைய விளம்பரங்களை வெளியிட்டுள்ளன. அவர்கள் விளம்பரங்களுக்காக செலவிட்ட ரூ.22 ஆயிரம் கோடியை எப்போது திரும்ப வசூலிப்பீர்கள்? என்றைக்கு அந்தப் பணம் வசூலிக்கப்படுகிறதோ, இந்த நாளில் நாங்களும் ரூ.97 கோடியை செலுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News