இந்தியா

மூத்த குடிமக்கள் கட்டண சலுகை ரத்து காரணமாக ரெயில்வேக்கு 5 ஆண்டுகளில் ரூ.8,913 கோடி கூடுதல் வருவாய்

Published On 2025-04-11 09:32 IST   |   Update On 2025-04-11 09:32:00 IST
  • கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 20-ந் தேதியுடன் மூத்த குடிமக்கள் கட்டண நிறுத்தப்பட்டது.
  • கட்டண சலுகை அளித்திருந்தால், ரூ.8 ஆயிரத்து 913 கோடி குறைவாகவே வருவாய் கிடைத்திருக்கும்.

புதுடெல்லி:

ரெயில்களில், 58 வயது பூர்த்தியடைந்த பெண்களுக்கு கட்டணத்தில் 50 சதவீதமும், 60 வயது பூர்த்தியடைந்த ஆண்களுக்கு கட்டணத்தில் 40 சதவீதமும் சலுகை அளிக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 20-ந் தேதியுடன் இச்சலுகை நிறுத்தப்பட்டது.

அதன்பிறகு மேற்கண்ட மூத்த குடிமக்களும் முழு கட்டணம் செலுத்தி ரெயில்களில் பயணித்து வருகிறார்கள்.

இதற்கிடையே, மூத்த குடிமக்கள் கட்டண சலுகை ரத்து காரணமாக, 2020-ம் ஆண்டு மார்ச் 20-ந் தேதியில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் ரெயில்வேக்கு கிடைத்த கூடுதல் வருவாய் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், மத்தியபிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் கேள்வி கேட்டார்.

அதற்கு ரெயில்வே அமைச்சகத்தின்கீழ் உள்ள ரெயில்வே தகவல் சேவை மையம் பதில் அளித்துள்ளது.

அதில், கடந்த 5 ஆண்டுகளில் 31 கோடியே 35 லட்சம் மூத்த குடிமக்கள், ரெயில்களில் பயணித்து இருப்பதாகவும், அவர்கள் மூலம் ரூ.20 ஆயிரத்து 133 கோடி வருவாய் கிடைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இது முழு கட்டணம் செலுத்தியதால் கிடைத்த தொகை. கட்டண சலுகை அளித்திருந்தால், ரூ.8 ஆயிரத்து 913 கோடி குறைவாகவே வருவாய் கிடைத்திருக்கும். எனவே, கட்டண சலுகை ரத்து காரணமாக, கூடுதலாக ரூ.8 ஆயிரத்து 913 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ரெயில்வே தகவல் சேவை மையம் கூறியுள்ளது.

Tags:    

Similar News