இந்தியா

மற்றொரு அவதூறு வழக்கு... ஆஜராவதில் இருந்து ராகுல் காந்திக்கு விலக்கு கிடைக்குமா? 15ம் தேதி விசாரணை

Published On 2023-04-01 22:42 IST   |   Update On 2023-04-01 22:42:00 IST
  • தகுதி நீக்கம் செய்வதற்கு குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என ராகுல் வழக்கறிஞர் வாதம்
  • ஏப்ரல் 15ம் தேதி ராகுல் காந்தியின் மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தானே:

குஜராத் நீதிமன்றத்தில் தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் ராகுல் காந்தி மீதான மற்றொரு அவதூறு வழக்கு மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்ட நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. 2014 மக்களவைத் தேர்தலின்போது மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மகாத்மா காந்தியை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சுட்டுக் கொன்றுவிட்டு, இப்போது தேர்தல் பிரசாரத்துக்கு காந்தியின் பெயரை பயன்படுத்துகிறார்கள் என்றார்.

இதற்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ராஜேஷ் குன்டே என்பவர், ராகுல் காந்தி மீது பிவாண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜரான ராகுல் காந்தி, தான் எந்த தவறும் செய்யவில்லை என தெரிவித்திருந்தார்.

மேலும், கடந்த ஆண்டு இந்த வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும் என கூறியிருந்தார். பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதால், தனது தொகுதிக்கு அடிக்கடி செல்ல வேண்டும், கட்சிப் பணிக்காக நிறைய பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதால் விலக்கு அளிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், ராகுல் காந்தியின் மனுவுக்கு மனுதாரர் எதிர்ப்பு தெரிவித்தார். அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ராகுல் காந்தியின் வழக்கறிஞர்  ஆஜராகி, ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது சட்டப்பூர்வமானது அல்ல என்று கூறினார். தகுதி நீக்கம் செய்வதற்கு குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது எனக் கூறியதுடன், அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் கூறினார்.

எழுத்துப்பூர்வ அறிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், உத்தரவு பிறப்பிக்கும்போது அதற்கு ஏற்ப முடிவு எடுக்கவேணடும் எனவும் மனுதாரரின் வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் ராகுல் காந்தியின் மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News