இந்தியா

பீகார் பிரசாரத்திற்கு மத்தியில் மீன் பிடித்து, நீச்சலடித்து மகிழ்ந்த ராகுல் காந்தி

Published On 2025-11-03 00:17 IST   |   Update On 2025-11-03 00:17:00 IST
  • தனது வழக்கமான வெள்ளை டீ-சர்ட் மற்றும் கருப்பு பேன்ட்டுடன், ராகுல் காந்தி ஏரியில் இறங்கி நீச்சல் அடித்தார்.
  • மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படும் மூன்று மாத கால இடைவெளியில், ஒவ்வொரு மீனவக் குடும்பத்துக்கும் தலா ரூ.5,000 நிதியுதவி வழங்கப்படும்.

பீகார் சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வருகிற 6-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 2-வது கட்டமாக எஞ்சிய 122 இடங்களுக்கு 11-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தலில் ஆளும் என்டிஏ கூட்டணி மற்றும் மகாபந்தன் (இந்தியா) கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது தேர்தல் பிரச்சாரத்தில் வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டுள்ளார்.

பீகார் மாநிலம் பேகுசராய் பகுதியில் தனது வழக்கமான வெள்ளை டீ-சர்ட் மற்றும் கருப்பு பேன்ட்டுடன், ராகுல் காந்தி ஏரியில் இறங்கி நீச்சல் அடித்தார்.

இடுப்பளவு தண்ணீரில் நின்றபடி அங்குள்ள உள்ளூர் மீனவர்களுடன் மீன்பிடித்து மகிழ்ந்தார். மேலும் அவர்களின் பிரச்சனைகள், எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ராகுல் வாகக் கேட்டறிந்தார்.

இந்த புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த காங்கிரஸ், மீன் வளர்ப்புக்கு காப்பீட்டுத் திட்டம், மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படும் மூன்று மாத கால இடைவெளியில், ஒவ்வொரு மீனவக் குடும்பத்துக்கும் தலா ரூ.5,000 நிதியுதவி ஆகிய வாக்குறுதிகளை குறிப்பிட்டது.

 ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், "மீனவர்கள் பீகார் பொருளாதாரத்தின் மிக முக்கிய அங்கம். அவர்களின் உழைப்பும், தொழில் குறித்த ஆழமான புரிதலும் எனக்கு உத்வேகம் அளிக்கிறது. அவர்களின் உரிமை மற்றும் கௌரவத்திற்காக நான் உறுதுணையாக இருப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.  

Tags:    

Similar News