இந்தியா

ராகுல் காந்தி

என்மீது தனிப்பட்ட தாக்குதல் தொடுக்க ரூ.1000 கோடி பணம் செலவு செய்கிறது பா.ஜ.க - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Published On 2022-11-28 22:17 IST   |   Update On 2022-11-28 22:17:00 IST
  • இந்திய ஒற்றுமை பயணம் என அழைக்கப்படும் இந்த பாதயாத்திரை காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் வரை தொடரும்.
  • மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை 12 நாட்கள் நடக்கிறது.

போபால்:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கினார்.

இந்திய ஒற்றுமை பயணம் என அழைக்கப்படும் இந்த பாதயாத்திரை, காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் வரை தொடரும். இதுவரை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என தென்னிந்தியப் பகுதிகளை முடித்துக்கொண்டு மகாராஷ்டிர மாநிலத்திற்குச் சென்றார். அதன்பின், கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய பிரதேச எல்லைக்குள் வந்த அவர் தொடர்ந்து பாதயாத்திரையில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் காங்கிரஸ் தொண்டர்களும் மூவர்ண கொடியை ஏந்தியபடி உற்சாகமுடன் நடந்து செல்கின்றனர்.

மத்திய பிரதேசத்தில், ராகுல் காந்தி பாதயாத்திரை 12 நாட்கள் நடக்கிறது. அங்கு 380 கி.மீ. தூரம் நடைபயணம் செல்கிறார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி இந்தூரில் செய்தியாளர்ளைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பா.ஜ.க. எனது தோற்றத்தினைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஆயிரம் கோடி அளவுக்கு பணம் செலவழித்துள்ளது என அதிரடியாக குற்றம் சாட்டினார்.

அவர்கள் என்னை பற்றிய ஒரு தோற்றம் உருவாக்கி வைத்துள்ளனர். அது தீங்கு தரக்கூடியது என மக்கள் நினைக்கின்றனர். ஆனால், அது எனக்கு நன்மையே. ஏனெனில், என்னிடம் உண்மை உள்ளது. என்மீது நடத்தப்படும் தனிப்பட்ட தாக்குதல்கள் நான் சரியான திசையில் செல்கிறேன் என்று எனக்கு எடுத்துக்கூறுகிறது என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News