மாணவிகள் போராட்டம்
சண்டிகர் பல்கலைக்கழக மாணவிகள் போராட்டம் - வீடியோ எடுத்த மாணவி உள்பட 3 பேர் கைது
- வீடியோ எடுத்த மாணவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
- இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணைக்கு முதல் மந்திரி உத்தரவிட்டுள்ளார்.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தனியாருக்குச் சொந்தமான சண்டிகர் பல்கலைக்கழகம் உள்ளது. அந்த பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவை தாண்டிய பிறகு, மாணவிகள் திடீரென போராட்டத்தில் குதித்தனர். பல்கலைக்கழக மாணவிகளை ஆபாசமாக எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானதாக தகவல் பரவியது. அதை கேள்விப்பட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த போலீசார் மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பல்கலைக்கழகம் அளித்த புகாரின்பேரில், இந்திய தண்டனை சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவி, தனது ஆபாச வீடியோவை இமாசலபிரதேச மாநில தலைநகர் சிம்லாவை சேர்ந்த ஒரு வாலிபருக்கு அனுப்பியதும், அதை அந்த வாலிபர் சமூக வலைதளத்தில் வெளியிட்டதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அந்த வாலிபரின் பங்கு பற்றி விசாரணை நடந்து வருகிறது. ஆனால், ஒரு மாணவியை தவிர, பிற மாணவிகள் ஆபாசமாக வீடியோ எடுக்கப்படவில்லை என்று பல்கலைக்கழக மாணவர் நல இயக்குனர் அரவிந்த் சிங் காங் மறுத்தார்.
பஞ்சாப் மாநில பெண்கள் ஆணைய தலைவி மனிஷா குலாதி, பல்கலைக்கழக வளாகத்துக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.
மேலும், பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான், இவ்விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், சண்டிகர் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று இரவு முழுவதும் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ எடுத்த மாணவி உள்பட 3 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.