வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடமாநிலங்களில் நேரில் ஆய்வு செய்கிறார் பிரதமர் மோடி
- உத்தரகாண்டில் பேரழிவு ஏற்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
- பல லட்சம் ஹெக்டேர் விவசாய பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக தொடர் மழையால் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த மாநிலங்களில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல மாநிலங்களில் முக்கிய நெடுஞ்சாலைகள் தடைபட்டுள்ளன ஆறுகள் அபாய அளவை தாண்டி ஓடுகின்றன. மேலும் விவசாய நிலங்களில் பெரும் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இமாச்சலப் பிரதேசத்தில் மண்டி, சிம்லா, குழு மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள முக்கிய வழித்தடங்கள் உட்பட மாநிலம் முழுவதும் 1217 சாலைகள் தடைபட்டுள்ளன. இந்த மாநிலத்தில் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்டில் பேரழிவு ஏற்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. பல லட்சம் ஹெக்டேர் விவசாய பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரூ.5,702 கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும் என அந்த மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
வட இந்தியாவில் நிலவும் வெள்ள நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு உதவ வேண்டும் என மாநில அரசுகள் அழைப்பு விடுத்துள்ளன.
இதனைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக சென்று ஆய்வு செய்ய உள்ளார்.
பாதிக்கப்பட்ட மாநிலங்களில் நிலவரத்தை மதிப்பிடவும் நிவாரண பணிகளை மறு ஆய்வும் செய்கிறார். பிரதமர் மோடியின் வருகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.