இந்தியா

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி பெண்களின் முன்னேற்றத்திலேயே அடங்கியுள்ளது- குடியரசுத் தலைவர்

Published On 2022-11-16 18:28 GMT   |   Update On 2022-11-16 18:28 GMT
  • மகளிர் சுயஉதவிக் குழுக்கள், பெண்களை ஒன்றாக சேர்ப்பதற்கான சிறந்த தளம்.
  • மற்றவர்கள் உரிமைக்காக பெண்கள் குரல் கொடுக்க வேண்டும்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற மகளிர் சுயஉதவிக் குழுக்களின் மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

பெண்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் பணியாற்றும் சூழலை நாம் உருவாக்க வேண்டும், அப்போதுதான் அவர்களின் முழு ஆற்றலை பயன்படுத்த முடியும். இந்தியா வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு அதிக அளவில் பெண்களின் பங்களிப்பு அவசியமாகும். 


மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெண்களின் அதிக அளவிலான பங்களிப்பு, பொருளாதாரம், சமுதாயம் மற்றும் நாட்டை வலுப்படுத்தும். பெண்கள் ஒருவொருக்கொருவர் ஊக்குவித்து, உதவி செய்து, மற்றவர்கள் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பெண்களை ஒன்றாக சேர்ப்பதற்கான சிறந்த தளம். வளர்ச்சியின் பல்வேறு திசைகளில் அவர்களை முன்னேற்ற இது உதவுகிறது.

மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்களுடைய உற்பத்திப் பொருட்களை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக பழங்குடியின பெண்களால் தயாரிக்கப்படும் பொருட்கள், இந்திய பழங்குடியின கூட்டுறவு சந்தை மேம்பாட்டுக் கூட்டமைப்பு மூலம் நுகர்வோரை சென்றடைவது மகிழ்ச்சி அளிக்கிறது.

நமது சகோதரிகளும், புதல்விகளும் தங்களது வாழ்வாதாரத்திற்காக உழைத்து பொருளாதார தன்னிறைவு அடைந்து வருகின்றனர். இதன் பயனாக ஊரக குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற்றமடைந்து வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி நமது நாட்டு பெண்களின் முன்னேற்றத்திலேயே அடங்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News