இந்தியா

ஆற்றில் தள்ளி விடப்பட்ட தாய், குழந்தைகள்

செல்பி எடுப்பது போல கள்ளக்காதலி- 2 குழந்தைகளை ஆற்றில் தள்ளிய வாலிபர்: 2 பேர் கதி என்ன?

Published On 2023-08-07 11:36 IST   |   Update On 2023-08-07 11:36:00 IST
  • கோதாவரி ஆற்று பாலத்தில் செல்பி எடுக்கலாம் என சுரேஷ் தெரிவித்தார்.
  • சுகாசினியும் அவரது இளைய மகள் ஜெர்சியும் ஆற்று தண்ணீரில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாடை பள்ளியை சேர்ந்தவர் சுகாசினி (வயது 36). இவருக்கு லட்சுமி கீர்த்தனா (13), ஒரு வயதில் ஜெர்சி என 2 மகள்கள் இருந்தனர்.

சுகாசினியின் கணவர் இறந்து விட்டார். குடிவாடாவை சேர்ந்த சுரேஷ் என்பவர் உடன் சுகாசினிக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

இந்த நிலையில் சுரேஷ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார். இதனை அறிந்த சுகாசினி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் சுரேஷுக்கும் சுகாசினிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் இரவு சுரேஷ், சுகாசினிக்கு போன் செய்தார். அப்போது ராஜ மகேந்திரவரத்தில் உள்ள ஜவுளி கடையில் உனக்கும் உனது பிள்ளைகளுக்கும் துணி எடுத்து தருவதாக கூறினார்.

பின்னர் தனது காரை எடுத்துக்கொண்டு சுகாசினி வீட்டிற்கு வந்தார். சுகாசினியும் அவரது 2 மகள்களையும் காரில் ஏற்றிக் கொண்டு ராஜ மகேந்திரவரம் நோக்கி சென்றார்.

அப்போது வழியில் உள்ள கோதாவரி ஆற்று பாலத்தில் செல்பி எடுக்கலாம் என தெரிவித்தார். இதனை நம்பிய சுகாசினி தனது 2 மகள்களுடன் ஆற்று பாலத்தின் ஓரத்தில் நின்றார்.

அப்போது திடீரென சுரேஷ் சுகாசினி மற்றும் அவரது 2 மகள்களையும் ஆற்றில் தள்ளினார். மூத்த மகள் லட்சுமி கீர்த்தனா ஆற்றுப்பாலத்தில் இருந்த பிளாஸ்டிக் குழாயை பிடித்து தொங்கினார்.

சுகாசினியும் அவரது இளைய மகள் ஜெர்சியும் ஆற்று தண்ணீரில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து சுரேஷ் அங்கிருந்து காரில் தப்பி சென்றார்.

லட்சுமி கீர்த்தனா ஒரு கையில் பிளாஸ்டிக் குழாயை பிடித்துக்கொண்டு மற்றொரு கையில் தன்னிடம் இருந்த செல்போன் மூலம் 100 எண்ணில் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

சிறுமி ஒருவர் குழாயை பிடித்துக்கொண்டு தொங்குவதை அந்த வழியாக சென்ற ஏராளமான பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியுடன் வேடிக்கை பார்த்தனர்.

ராவுல பாலம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தொங்கிக்கொண்டு இருந்த லட்சுமி கீர்த்தனாவை பத்திரமாக மீட்டனர்.

மேலும் 2 படகுகள் மூலம் சுகாசினி, அவரது குழந்தை ஜெர்சி ஆகியோரை தேடி வருகின்றனர். அவர்கள் கதி என்ன என்பது தெரியவில்லை.

லஷ்மி கீர்த்தனா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News