இந்தியா

VIDEO: தள்ளு.. தள்ளு.. தள்ளு.. கான்கிரீட்டில் சிக்கிய ஜனாதிபதியின் ஹெலிகாப்டரை மீட்ட போலீசார்

Published On 2025-10-22 11:47 IST   |   Update On 2025-10-22 11:59:00 IST
  • திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.
  • ஜனாதிபதி வந்த ஹெலிகாப்டரின் சக்கரம் கான்கிரீட் தளத்தில் பதிந்து லேசாக சரிந்தது.

திருவனந்தபுரம்:

ஐனாதிபதி திரவுபதி முர்மு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருவதாக இருந்தது. அப்போது எல்லையில் நிலவிய போர் பதற்றம் காரணமாக அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் அவர் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று கேரளா வந்தார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லுதல், ராஜ்பவனில் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றல், வர்க்கலா சிவகிரி மடத்தில் நடக்கும் ஸ்ரீ நாராயணகுரு மகா சமாதி நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விதமாக அவரது பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று அவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றார். இதற்காக அவர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அவரது ஹெலிகாப்டர் முதலில் நிலக்கல்லில் தரையிறங்குவதாக இருந்தது.

ஆனால் மழை உள்ளிட்ட பாதகமான வானிலை காரணமாக அவரது ஹெலிகாப்டர் இறங்கும் இடம் பத்தினம்திட்டா மல்லசேரி அருகே உள்ள பிரமடம் மைதானத்ததிற்கு மாற்றப்பட்டது. இதற்காக அந்த மைதானத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டது.

அந்த ஹெலிகாப்டர் தளத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணித்த ஹெலிகாப்டர் இன்று காலை தரையிறக்கப்பட்டது. அப்போது ஜனாதிபதி வந்த ஹெலிகாப்டரின் சக்கரம் கான்கிரீட் தளத்தில் பதிந்து லேசாக சரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஹெலிகாப்டர் சக்கரம் சிக்கி லேசாக சரிந்தபடி இருந்ததால் ஹெலிகாப்டரில் இருந்து ஜனாதிபதி உடனடியாக இறங்கவில்லை. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஜனாதிபதியின் ஹெலிகாப்டரை தள்ளி சமமான பகுதிக்கு கொண்டு சென்றனர்.

அதன்பிறகு ஹெலிகாப்டரில் இருந்து ஜனாதிபதி இறங்கி வந்தார். அவரை தேவசம்போர்டு மந்திரி வாசவன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பிறகு அங்கிருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கார் மூலமாக சபரிமலைக்கு புறப்பட்டார்.

 

ஜனாதிபதி ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக பிரமடம் மைதானத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டது. அந்த தளத்தில் நேற்று வரை கான்கிரீட் கலவை கொட்டப்பட்டு இருக்கிறது. அதில் தான் ஜனாதிபதி வந்த ஹெலிகாப்டரின் சக்கரம் சிக்கி சரிந்ததாக தெரிகிறது.

ஜனாதிபதி வருகைக்காக நேற்று அனைத்துவிதமான ஒத்தகைகளும் நடத்தப்பட்டன. இந்தநிலையில் ஹெலிகாப்டர் தளத்தின் கான்கிரீட்டில் ஜனாதிபதியின் ஹெலிகாப்டர் சக்கரம் சிக்கி சரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News