பிரதமர் மோடி நாளை வாரணாசி பயணம்: 4 வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்
- பிரதமர் மோடி நாளை இருநாள் பயணமாக வாரணாசி செல்கிறார்.
- அங்கு 4 வந்தே பாரத் ரெயில் சேவைகளைத் தொடங்கி வைக்கிறார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி நாளை (நவம்பர் 8) 4 வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைக்க உள்ளார். இதில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடகாவின் பெங்களூருவுக்கு செல்லும் ஒரு ரயிலும் அடக்கம். இந்த ரயில் தமிழக நகரங்கள் வழியே செல்கிறது.
இந்தியாவின் நவீன ரெயில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இந்த ரெயில் சேவை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதிதாக 4 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
கேரளாவின் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடகாவின் பெங்களூரு வரை வந்தே பாரத் ரெயில் ஒன்று இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் இந்த வழித்தடத்தில் பயண நேரம் 8 மணி நேரம் 40 நிமிடமாகக் குறையும். இந்த ரெயிலானது கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக செல்ல உள்ளது.
உ.பி.யின் பனாரஸ் நகரில் இருந்து ம.பி.யின் கஜூராகோ இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரெயிலானது வாரணாசி, பிரயாக்ராஜ், சித்ரகூடம் வழியே பயணிக்கிறது. இது மதம் சார்ந்த மற்றும் கலாசார சுற்றுலாவை ஊக்குவிக்கும்.
உ.பி.யின் ஷஹாரான்பூர் முதல் லக்னோ இடையிலான வந்தே பாரத் ரெயிலால் பயண நேரம் ஒரு மணி நேரம் குறையும். இந்த ரெயிலானது லக்னோ, சீதாபூர், ஷாஜஹான்பூர், பைரேலி, மொராதாபாத், பிஜ்னூர் நகரங்களில் நின்று செல்லும்.
பஞ்சாபின் பிரோஸ்பூர்-டெல்லி இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதன்மூலம் இரு நகரங்கள் இடையிலான பயண நேரம் 6 மணி 40 நிமிடமாக குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.