இந்தியா

சுபான்ஷு சுக்லாவை வரவேற்கிறேன்: பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2025-07-15 15:55 IST   |   Update On 2025-07-15 15:55:00 IST
  • விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட வீரர்கள் பத்திரமாக தரையிறங்கினர்.
  • சுபான்ஷு சுக்லா குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

புதுடெல்லி:

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்ட டிராகன் விண்கலம் இன்று மதியம் வளிமண்டல பகுதிக்குள் நுழைந்தது. டிராகன் விண்கலத்தில் உள்ள 2 சிறிய 'டுரோக்' பாராசூட்டுகள் பூமிக்கு மேல் சுமார் 5.5 கிலோ மீட்டர் உயரத்தில் கலிபோர்னியா கடலின் மேல் பகுதியில் திறக்கப்பட்டது. அதன்பின், 4 பெரிய பாராசூட்டுகள் விரிந்து பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கடற்கரையில் பத்திரமாக தரையிறங்கியது.

அதன்பின், ஸ்பேஸ் எக்ஸின் மீட்புக் கப்பல் விண்கலத்தை அடைந்தது. விண்கலத்தில் இருக்கும் சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களையும், மீட்புக்குழுவினர் மீட்டு மருத்துவ பரிசோதனைகளுக்காக அழைத்துச் சென்றனர். அனைவரும் நலமாக உள்ளனர் என நாசா தெரிவித்துள்ளது.

விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா பத்திரமாக தரையிறங்கியதைக் கொண்டாடும் வகையில் அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். இஸ்ரோவை சேர்ந்தவர்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், சுபான்ஷு சுக்லா வெற்றிகரமாக தரையிறங்கியது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், விண்வெளிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்திலிருந்து பூமிக்குத் திரும்பும் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவை வரவேற்கும் நாட்டுடன் நானும் இணைகிறேன். சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பார்வையிட்ட இந்தியாவின் முதல் விண்வெளி வீரராக, அவர் தனது அர்ப்பணிப்பு, தைரியம் மற்றும் முன்னோடி மனப்பான்மை மூலம் ஒரு பில்லியன் கனவுகளை ஊக்குவித்துள்ளார். இது நமது சொந்த மனித விண்வெளி விமானப் பயணமான ககன்யான் நோக்கிய மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News