பிரதமர் மோடி நாளை ஆந்திரா வருகை: ரூ.13,430 கோடி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
- குண்டலப்பள்ளி -கனிகிரி புறவழி சாலை பணிக்காக ரூ. 4,920 கோடியில் அடிக்கல் நாட்டுகிறார்.
- கெயில் எரிவாயு திட்டத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
நாளை கர்னூலில் உள்ள சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திராவை பார்வையிடுகிறார். பின்னர் கர்னூலில் ரூ.13,430 கோடி மதிப்பிலான மேம்பாட்டு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
ஓர்வக்கல் மற்றும் கொப்பர்த்தி தொழில்துறை வழித்தடத்தை தொடங்கி வைக்கிறார். பாபக்கினி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தை திறந்து வைக்கிறார். குண்டலப்பள்ளி -கனிகிரி புறவழி சாலை பணிக்காக ரூ. 4,920 கோடியில் அடிக்கல் நாட்டுகிறார். சப்பாவரம்-ஷீலாநகர் இடையே ரூ. 960 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட பசுமை சாலை கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பீலேறு- கலூரு இடையே 4 வழி சாலை விரிவாக்க பணிக்கு ரூ.1,140 கோடியில் பணியை தொடங்கி வைக்கிறார். கெயில் எரிவாயு திட்டத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல்- மந்திரி பவன் கல்யாண், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் கலந்து கொள்கின்றனர்.
பிரதமர் மோடி நந்தியால் மாவட்டத்தில் உள்ள மல்லிகார்ஜூன சுவாமி கோவில் மற்றும் ஸ்ரீசைலம் கோவில்களில் பூஜை செய்து வழிபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.