இந்தியா

இந்தியா வந்துள்ள ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

Published On 2023-12-16 15:22 IST   |   Update On 2023-12-16 15:22:00 IST
  • சுற்றுப்பயணத்தால் இந்தியா-ஓமன் இடையிலான வெளியுறவு தொடர்பு மேம்படும்.
  • வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து பேச்சுவார்த்தை.

ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். அவருடன் அந்நாட்டு அமைச்சர்கள், உயர்மட்ட அதிகாரிகளும் வருகை தந்துள்ளனர்.

ராஜ்பவன் வந்தடைந்த ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி முறைப்படியான வரவேற்பு அளித்தனர்.

ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் இந்தியா வருவது இதுவே முதல் முறை ஆகும். அவரது சுற்றுப்பயணத்தால் இந்தியா-ஓமன் இடையிலான வெளியுறவு தொடர்பு மேம்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

முன்னதாக, இந்திய வௌியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில், " இந்தியா- ஓமன் மூலோபாய கூட்டாண்மைக்கு ஊக்கமளிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத் மாளிகையில் ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கை அன்புடன் வரவேற்றார். இருதரப்பு விவாதங்களுக்கும் அவர் களம் அமைத்தார்.

நிகழ்ச்சி நிரலில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான எதிர்கால ஒத்துழைப்புக்கான பாதைகளை பட்டியலிடுவது ஆகியவை அடங்கும்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News