இந்தியா

திடீரென மருத்துவமனையில் சேர்ந்த குலாம் நபி ஆசாத்: பிரதமர் மோடி நலம் விசாரிப்பு

Published On 2025-05-29 00:30 IST   |   Update On 2025-05-29 00:30:00 IST
  • உடல்நலம் சரியில்லாததால் குவைத் மருத்துவமனையில் குலாம் நபி ஆசாத் சேர்ந்தார்.
  • தற்போது குலாம் நபி ஆசாத் நலமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

புதுடெல்லி:

பஹல்காம் தாக்குலுக்குப் பதிலாக பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. இதையடுத்து எல்லைகளில் தாக்குதலைத் தொடங்கிய பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இந்தியா பதிலடி கொடுத்தது.

இதற்கிடையே, பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து உலக நாடுகளிடம் எடுத்துரைக்க அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு நியமித்தது. இந்தக் குழு ஒவ்வொரு நாடுகளுக்கும் சென்று பாகிஸ்தான் பயங்கரவாதச் செயல்கள் குறித்து எடுத்துரைத்து வருகின்றனர்.

குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றிருக்கும் பா.ஜ.க. எம்.பி. பைஜயந்த் பாண்டா தலைமையிலான குழுவில் முன்னாள் மத்திய மந்திரி குலாம் நபி ஆசாத் இடம்பெற்றார். அவருக்கு திடீரென உடல்நலம் சரியில்லாததால் குவைத்தின் ராயல் ஹயாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவர் தற்போது நலமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், குலாம் நபி ஆசாத்துக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போனதைத் தொடர்ந்து பிரதமர் மோடி அவரது உடல்நிலை குறித்து தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.

Tags:    

Similar News