இந்தியா

2 நாள் சுற்றுப்பயணமாக அமீரகம் புறப்பட்டார் பிரதமர் மோடி

Published On 2024-02-13 06:37 GMT   |   Update On 2024-02-13 06:37 GMT
  • மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் பிரதமர் மோடி இந்திய மக்களிடையே உரையாற்றுகிறார்.
  • இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளது.

புதுடெல்லி:

பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று அமீரகம் புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு அபுதாபிக்கு செல்லும் அவர் இன்று மாலை 'அஹ்லன்' மோடி என்ற தலைப்பில் நடைபெறும் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார்.

அபுதாபி ஜாயித் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் மாலை நடைபெறும் இந்த பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் 700 நடனக்கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி பார்க்கிறார். தொடர்ந்து மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் பிரதமர் மோடி இந்திய மக்களிடையே உரையாற்றுகிறார்.

அவர் நாளை மதியம் துபாயில் 3-வது நாளாக நடைபெறும் உலக அரசு உச்சி மாநாட்டில் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு பேசுகிறார். அப்போது அமீரக அதிபர், ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் அமீரக துணை அதிபர் ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இதில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளது.

தொடர்ந்து மாலை பிஏபிஎஸ் அமைப்பு சார்பில் துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் முரக்கா பகுதியில் பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட கோவில் மற்றும் அதன் வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

கோவிலுக்குள் சென்று கட்டுமானங்களை பார்வையிட்டு அங்கு நடைபெறும் பூஜையிலும் கலந்து கொண்டு வழிபாடு நடத்துகிறார். முன்னதாக, அபுதாபி இந்து கோவிலில் காலையில் சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.

2015-ம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மேற்கொள்ளும் ஏழாவது பயணம் இதுவாகும். கடந்த 8 மாதங்களில் இது மூன்றாவது முறையாகும்.

Tags:    

Similar News