கவனிச்சீங்களா.. எல்லாம் வெறும் போட்டோ ஷூட் - டெல்லி குண்டுவெடிப்பில் பிரதமர் மோடியை விமர்சித்த ஆம் ஆத்மி
- குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர்.
- எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கடந்த திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர். இதில் காயமடைந்து, எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.
சம்பவம் நடந்த அன்றைய இரவு டெல்லி முதல்வர் ரேகா குப்தா மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்தார்.
இதற்கிடையே பூட்டானில் இருந்து திரும்பியவுடன் நேற்று எல்என்ஜேபி மருத்துவமனைக்குச் சென்ற பிரதமர் மோடி, காயமடைந்தவர்களை சந்தித்தார். இதன் புகைப்படங்கள் வெளியாகின.
இந்நிலையில் ரேகா குப்தா சந்தித்தபோது காலில் கட்டு போடப்பட்டிருந்த நோயாளிக்கு நேற்று மோடி சந்திக்கும்போது கூடுதலாக கையில் கட்டுபோடப்பட்டிருந்தது.
இந்த புகைப்படங்களை பகிர்ந்த ஆம் ஆத்மி மூத்த தலைவர் சவுரப் பரத்வாஜ் இரு புகைப்படங்களிலும் உள்ள வேற்றுமையை குறிப்பிட்டு இது அவசர அவசரமாக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் தான் என்று விமர்சித்துள்ளார்.