கையை இழந்தும் நம்பிக்கையை இழக்கவில்லை... உதவி கலெக்டராக பொறுப்பேற்ற மாற்றுத்திறனாளி
- சிறுமியாக இருந்த பார்வதி 10, 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.
- கிருஷ்ண தேஜா அளித்த ஊக்கமும் அறிவுரையும், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை பார்வதியின் மனதில் விதைத்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் அம்பலப்புழையை சேர்ந்தவர் கே.எஸ்.கோபகுமார். இவர் ஆலப்புழை கலெக்டர் அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இவருடயை மனைவி ஸ்ரீ கலா, ஆசிரியர். இவர்களது மகள் பார்வதி கோபகுமார் (வயது27). இவர் கடந்த 2010-ம் ஆண்டு 7-ம் வகுப்பு படித்து கொண்டு இருந்த போது, ஒரு நாள் தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நடந்த விபத்தில் வலது கையை இழந்தார். அதன்பின்பு அவருக்கு செயற்கை கை பொருத்தப்பட்டது.
எழுதுவது உள்பட வலது கையின் அனைத்து செயல்பாடுகளையும் இடது கையால் நிறைவேற்ற தொடங்கினார். சிறுமியாக இருந்த பார்வதி 10, 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.
தொடர்ந்து பெங்களூருவில் சட்ட கல்லூரியில் படிப்பை முடித்த அவர், இடைக்கால பயிற்சிக்காக ஆலப்புழை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருக்கிறார். அப்போது ஆலப்புழை கலெக்டராக எஸ்.சுகாஸ் பணியாற்றினார். அந்த அலுவலகத்தில் அப்போது உதவி கலெக்டராக கிருஷ்ண தேஜா பணியாற்றி வந்தார். அப்போது அவர் அளித்த ஊக்கமும் அறிவுரையும், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை பார்வதியின் மனதில் விதைத்தது. அந்த விதையை மரமாக்க கடினமாக உழைத்த பார்வதி 2024-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் 282-வது இடத்தை (ரேங்க்) பிடித்து வெற்றி பெற்றார். தற்போது எர்ணாகுளம் கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.
ஒரு கை பலத்தாலும் மன உறுதியாலும், கடின உழைப்பாலும், ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று உதவி கலெக்டராக பொறுப்பேற்றுள்ள பார்வதி கோபகுமாருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. உதவி கலெக்டர் பார்வதியின் தங்கை ரேவதி திருவனந்தபுரத்தில் படித்து வருகிறார்.