கல்விக்கடன் ரத்து, மாநில அரசுகள் விரும்பினால் மட்டுமே "நீட்" - காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகள்
- மத்திய அரசு பணியிடங்களில் 30 லட்சம் காலி பணியிடங்களை நிரப்புவோம்.
- பா.ஜ.க. ஆட்சியில் நீதி மறுக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் குதித்துள்ளன.
ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகள் கொடுக்கும் வாக்குறுதிகள் மிகப்பெரிய அளவில் பேசப்படும் வகையில் அமையும். இந்த ஆண்டும் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.
காங்கிரஸ் கட்சியில் தேர்தல் அறிக்கை தயாரிக்க முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் குழு உருவாக்கப்பட்டது. அந்த குழுவினர் நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரிடமும் கருத்து கேட்டு தேர்தல் அறிக்கையை உருவாக்கினார்கள். அந்த அறிக்கை சமீபத்தில் காங்கிரஸ் காரிய கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.
காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் தேர்தல் அறிக்கையை ஆய்வு செய்தனர். இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறு-குறு தொழில் அதிபர்களுக்கு ஏற்ப தேர்தல் அறிக்கையில் சிறுசிறு மாற்றங்கள் செய்தனர்.
பாரதிய ஜனதாவின் உத்தரவாதங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் புதிய உத்தரவாதங்கள் சேர்க்கப்பட்டன.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 11.30 மணிக்கு டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, சோனியா, ராகுல் ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
பின்னர் தேர்தல் அறிக்கை குறித்து ப.சிதம்பரம் பேசினார். முக்கிய அம்சங்கள் குறித்து அவர் விளக்கி கூறினார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-
* கடந்த 5 ஆண்டுகளில் ஜனநாயகம் பலவீனம் அடைந்து விட்டது.
* நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
* மத்திய அரசு பணியிடங்களில் 30 லட்சம் காலி பணியிடங்களை நிரப்புவோம்.
* அரசு பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணிமுறை நீக்கப்படும்.
* மத்திய அரசு பணிகளில் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் ஓராண்டில் நிரப்பப்படும்.
* வேலை வாய்ப்பின்மை என்பது நாட்டின் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. ஐ.ஐ.டி.யில் இருந்து வெளியேறும் 30 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பில்லை. குறைந்தபட்ச ஊதியமும் நலிந்துள்ளது. பணி, ஆரோக்கியம், நலன் என்ற அடிப்படையில் திட்டங்கள் உருவாக்கப்படும்.
* பா.ஜ.க. ஆட்சியில் நீதி மறுக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும்.
* மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ.1000 வழங்கப்படும்.
* 2025-ம் ஆண்டு முதல் மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.
* 2024 மார்ச் மாதம் வரையில் பெறப்பட்ட கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
#WATCH | Congress Party releases its manifesto for the 2024 Lok Sabha elections, at AICC headquarters in Delhi. #LokSabhaElections2024 pic.twitter.com/lNZETTLDLY
— ANI (@ANI) April 5, 2024